உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

243

ளாக) இருந்தவர்கள் என்பது விளங்கும். அவ்வகையில் சேனாவரையர் உரையில் ‘வினவி' ‘விடை' கூறும் பகுதிகள் மிகவுண்மை தெளிவிக்கும்.

இச்சூத்திரம் என்ன நுதலிற்றோ?' எனின், 'இன்னது நுதலிற்று' என நூற்பாக்கள் தோறும் சொல்லிச் செல்லுதல் இளம்பூரணர் உரை மரபு. சேனாவரையர் இம்மரபைக் கொண்டாரல்லர். அது கூறாக்காலும் நூற்பாவுக்குப் பொருள் கொள்ளத் தடையொன்றின்மை கண்டு அவர் விலக்கியிருத்தல் கூடும். அவர்தம் உரைச் செறிவு அவ்வாறு எண்ணத் தோன்றுகின்றது.

ஓ ஓ என வழங்கும் ஒலிக் குறிப்பை அறிவோம். "ஓ ஓ, அப்படியா செய்தி”, “ஓ ஓ என்று வாழ்கிறான்” (ஓகோ), "ஓ ஓ என்று கத்தியும் கேட்கவில்லை” இப்படியெல்லாம் இந்நாள் வழங்கும் வழக்கு சேனா வரையர் காலத்திலும் இருந்தமை அவருரையால் அறிய வருகின்றது. அது தொல்காப்பியர் காலத்தில் 'ஒள ஔ' என்று இருந்து மாறியதை அவர் சுட்டுகிறார். 'ஒளகாரத்தைச் சுட்டும் அவர், "இதனை இக்காலத்து ஓகாரமாக வழங்குப்” என்கிறார்.(281).

கண்டீரே கண்டீரே' என்பன போலவரும் அசை நிலையடுக்கும், 'நின்றை காத்தை' என்பன போலவரும் அசைநிலையும் இக்காலத்து அரிய என்றும், இக்காலத்துப் பயின்று வாரா என்றும் கூறுகிறார் (425, 426).

ஏ என்னும் உரிச்சொல் ‘பெற்று' என்னும் பொருளது என்கிறார் தொல்காப்பியர் (304). அதனை விளக்கும் சேனாவரையர் “பெற்று பெருக்கம். ஈது அக்காலத்துப் பயின்றது போலும்” என்கிறார். இத்தகைய குறிப்புகள் மொழி வரலாற்றுக்கு வாய்க்கும் அரிய கருவிகளாம்.

சில சிறப்புப் பெயர்கள், சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றைச் சுட்டுவதால் பல்வேறு வரலாற்றுத் துணைகளை வழங்குதல் உரைவல்லார் மரபு. அம்மரபில் தக்க பங்கு பற்றிக் கொள்கிறார் சேனாவரையர்.

அகத்தியனாரால் தமிழுரைக்கப்பட்டது (73) உறையூர்க்கண் நின்ற சிராப்பள்ளிக்குன்று (82)

சீத்தலைச் சாத்தன் (174)

தெய்வப் புலவன் திருவள்ளுவன் (41)

பட்டிபுத்திரர் கங்கை மாத்திரர் (165)

பரணரது பாட்டியல் (80)

பெருந்தலைச் சாத்தனார் (26)

பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (26)

முடத்தாமக் கண்ணியார் (270)

இன்னவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.