உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லாண்டு

இலக்கிய வகை அகராதி

285

இறைவனையும், இறைவன் தொடர்புடைய பொருள் களையும், அடியார்களையும் இன்னபிறவற்றையும், “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க" வென வாழ்த்துவதாய் அமைந்த நூல் திருப்பல்லாண்டு என்பதாகும்.

பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு அறுசீர் ஆசிரிய விருத்தத்தால் அமைந்துள்ளதறிக.

திருப்பள்ளியெழுச்சி

உலகத்துயிர்களையெல்லாம் தன் அடிக்கண் ஒடுக்கி மீண்டும் மலர்க்கும் இறைவன் துயில் கொள்வதாகவும், அவன் அத்துயில் நீங்கி எழுந்தருள வேண்டுவதாகவும் அவன் புகழ்பல பேசி எண்சீர் விருத்தத்தால் பாடப் பெறுவது திருப்பள்ளி எழுச்சியாகும். தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், மாணிக்க வாசகரும் அருளிய திருப்பள்ளி எழுச்சிகள் எடுத்துக்காட்டாம். பாரதியாரால் பாடப்பெற்ற பாரதமாதா பள்ளியெழுச்சி இவ்விலக்கணம் அமையப் புது நெறியில் அமைந்ததாகும். இறைவனைத் தந்தையாய்த், தாயாய்க், குருவாய்த், தெய்வமாய், அரசாய், வள்ளலாய் நிறுத்தித் திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்

வள்ளலார்.

திருப்பெயர்பொறி

பீடும், பெயரும், எழுதிக் கல்நாட்டல் வீரவழிபாட்டு முறையாகும். 'நடுகல்' என்பது வீர வழிபாட்டுச் சின்னமே.

66

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்.

என்னும் தொல்காப்பிய வழியிலேயே காட்சிக்காதை, கால் கோட்காதை, நீர்ப்படைக் காதை, நடுகற் காதை, வாழ்த்துக் காதை, வரந்தருகாதை என்பவற்றை இளங்கோவடிகளார் வஞ்சிக் காண்டமாக அமைத்துக் கொண்டார்.

செங்குட்டுவன் வடநாடு சென்று பனிமலையில் கல் லெடுத்து, மேன்மலையில் கோயில் நிறுவி, வழிபட்ட செய்தியை விரித்துரைத்தார். இச்செய்தியும், தென்னாட்டு வேந்தர்களாகிய கரிகாற்சோழன், இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன், முதலியோர்