உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

197

2. கயவாளி

“ஈரக்கையையும் உதறமாட்டான்”

“எச்சிற் கையையும் உதறமாட்டான்

என்னும் இருவகைகளாலும், ஒரு பொருள்தரும் பழமொழி வழக்கில் உள்ளது; கருமியின் இயல்பைப் படம் பிடித்துக் காட்டுவது.

“புண்ணுக்குத் தடவச் சுண்ணாம்பும் தரமாட்டான்” என்பதொரு பழமொழியும் கருமித்தனம் விளக்குவதே.

ஒரு புலவர், "பண்ணாகப் பாடிய தம் பாட்டை, அண்ணாந்து கேட்டு அழகு அழகு என்றவர், சுண்ணாம்பு பட்ட இலையும் தாராது போனதைக் கண்டு வருந்திப் பாடிய பாடல் தனிப்பாடல் திரட்டில் உண்டு.

இத்தகு கருத்துகளின் செறிவாகவும் முன்னோடி யாகவும் விளங்கும் ஒரு குறட்பாவை நினைக்க வியப்பாக உள்ளது. அது, “ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு”

என்பது.

கருமித்தனம் அமைந்த கயவர், தம் கன்னத்தை உடைக்கும் கொடிய கையை உடையவர்க்கு அல்லாமல் பிறர்க்கு ஈரக்கையையும் உதறமாட்டார் என்பது இதன் பொருளாம். ஈரக்கையையும் உதறினால் கையில் ஒட்டியுள்ள ஈரத்துளி கீழே வீழ்ந்து வீணாகப் போய்விடுமே என்று கையை உதறுவது இல்லையாம்!

குறளைக் குறுக்கிக் காட்டிய பழமொழிகளைக் கண்ட நாம் வியக்கிறோம். வியப்பின் மேல் வியப்பாக ஒரு மரபுச் சொல் வழங்குவதை அறிய இறும்பூது அடைகிறோம்.