உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ் வளம் - 22 228

"சாத்திரியார் நீடு நினைந்து இறுதியில் அடிகளை நோக்கி, 'நீரே இம் மூன்றிற்கும் விடையளிப்பீர்' என்றார். அடிகள் அவ்வாறே செய்தார். அவையும் தொல்காப்பியம் பற்றிய நுணுக்கமான ஆய்வுக் கேள்விகளாகும். அடிகளின் ஆழ்ந்த புலமை கண்டு சாத்திரியார் வியந்தார்; பலவாறு பாராட்டினார்,

"தம்மைக் கேள்வி கேட்டவர் என்று கருதாது, வெறாது சாத்திரியார் அடிகள்பால் பேரன்பு கொண்டார். மில்லரிடம் அடிகளை அழைத்துச் சென்று அவர்தம் ஆழ்ந்த அரும்புலமை, கூரறிவு முதலியவற்றை எடுத்துக் கூறி அவரையே தமிழாசிரியர் ஆக்குமாறு கேட்டுக் கொண்டார். "புலன் அழுக்கற்ற அந்தணாளர்" ஆகிய சாத்திரியாரின் பெருந்தகை நினைதோறும் இனிமையாகின்றது. அடிகள் உருபா 25 சம்பளத்தில் மில்லரால் 9-8-1898 இல் தமிழாசிரியர் ஆக்கப்பட்டார். (ம.ம.அ. வரலாறு), ஆசிரியப் பணியேற்ற அடிகள் தம் குடும்பத்துடன் சென்னை வாழ்வை மேற்கொண்டார். அது நாயகர்க்குப் பெருமகிழ்வாயிற்று.

கிறித்தவக் கல்லூரி எனினும் அது, உயர்நிலைப் பள்ளியொடும் கூடியது. அடிகள் முதற்கண் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளே எடுக்க நேர்ந்தது. பின்னர் அவர்தம் திறமையை அறிந்துகொண்ட மில்லர் (கல்லூரி முதல்வர்) கல்லூரி வகுப்பு களுக்கு அடிகள் கற்பிக்கும் ஏற்பாட்டைச் செய்தார்.

மும்மணிக்கோவை :

அடிகளார் கிறித்தவக் கல்லூரியில் அமர்ந்த நான்கு திங்கள் அளவுக்குள் ஒரு கொடிய நோய்க்கு ஆட்பட்டார். அந்நாள் 27-6-1898. அந்நோயைத் தீர்த்தருளுமாறு திருவொற்றியூர் முருகனை வேண்டிக் கொண்டார். நோய் தீர்ந்தது. அம் மகிழ்வால் ஒரு நூல் ஆக்கினார். அது திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை" என்பது. அது முன்னாடி முடிக்கப்பட்ட நாள் 28-9-1900

முனிமொழிப் பிரகாசிகை :

அக் காலத்தில் ஈழத்து யாழ்ப்பாணத்தில் சபாபதி நாவலர் என்னும் பெரிய பெரும்புலவர் ஒருவர் இருந்தார். அவர் உரைநடை வரைதலில் தனித்திறம் வாய்ந்தவர். இவர் வரைந்த நூல்களுள் ஒன்று திராவிடப் பிரகாசிகை என்பது. அவர் நடத்திய மாதிகை (திங்களிதழ்) ஞானாமிர்தம் என்பது. அதில் "தேவர்