உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

வண்ணம் கடமை புரிந்தார். ஊரார் பாராட்டும் உயர்நலங் கனிந்த இவர்கள் இல்வாழ்வின் பயனாக மக்கள் நால்வர் பிறந்தனர். அவர்கள் அமிர்தம், இராமலிங்கம், தெய்வயானை, இலக்குமி என்பார்.

சிவநெறிச் செல்வராகிய புலவரேறு நாளும் இன்னிசையால் றைவனை நாவாரப் பாடி இன்புற்றார். திருமறையும், திருமுறையும் ஓதுதலை நாட்கடனாகக் கொண்டு விளங்கினார். திருக்கோயில் வழிபாட்டிலும் பெரிதும் ஈடுபட்டார்.மொழியையும் தெய்வமாகப் போற்றி வழிபட்ட பெருமை புலவரேறு அவர்களுக்கு உண்டு. அதன் விளைவே 'தமிழரசி குறவஞ்சி'யாகத் தோன்றியது.

கட்டுரை என்பது திட்பமாக உரைக்கும் உரையைக் குறிக்கும். சொற்பொழிவாக அமைவதும் கட்டுரையே. எழுத்து வடிவம் பெறுவதும் கட்டுரையே. இவ்விரு வகையாலும் கட்டுரை வல்லாராகத் திகழ்ந்தார் புலவரேறு. அவர்தம் கட்டுரைகளை ஏற்ற மேடைகளும் மன்றங்களும் எண்ணற்றன. அவ்வாறே அவர்தம் கட்டுரைகளை ஏந்திய இதழ்களும் பல. ஆதலால் இவர் புகழ் மூலை முடுக்குகளிலும் பரவுவதாயிற்று.

இவர் இயற்றிய 'தமிழரசி குறவஞ்சி' கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவின்போது அரங்கேற்றப் பெற்றது. அப்பொழுது 'ஆசிரியர்' என்னும் பட்டத்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியது. இளங்காடு தமிழ் மன்றத்தினர் 'புலவரேறு' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினர். தஞ்சை நாவலர் நாட்டார் பேரவையினர் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தனர்.

பின்னர்ச், சேலம் குகை திருவள்ளுவர் கழகச் சார்பில் பொன்னாடை போர்த்திப் பெருவிழா எடுக்கப்பெற்றது. புகழைத் தேடிப் போகாதவரைப் புகழ் தேடி வந்தடைதல் உண்மைதானே!

இலக்கணக் கோவை, துருவ சரிதை, மனோவசிய மாலை என்பவை இவர் இயற்றிய நூல்கள். அவ்வப்போது பாடிய பதிகங்களும், தனிப் பாடல்களும் பல.

புலவரேறு தம் எழுபத்து ஒன்பதாம் அகவையில் 11-7- 1956ஆம் நாள் எதிர்பாராவகையில் திடுமென இறைவனடியில் இரண்டறக் கலந்தார். அன்பர் ஆறாத் துயருற்றனர். இனிய மனைவியாரும் செல்வர்களும் இரங்கினர். புலவர்கள் கையறு நிலை பாடிக் கரைந்துருகினர்!

புலவரேறு புகழ்வடிவானார்! வாழ்க வரத நஞ்சையர்!