கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
119
தேனாலும் நிரம்பிய கழகம், 'சாந்தில் தொடுத்த தீந்தேன்' என்று கூறத்தகுந்த நூல் விருந்து படைத்துச் செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும்' வேளாண்மையில் வயங்குகிறது.
தாகூர் சட்ட விரிவுரையாளர் திரு. கா.சு.பிள்ளை சென்னைச் சட்டக் கல்லூரியில் 1921 முதல் பணி செய்தார். அவர் கழக ஆட்சியாளர்களுக்கு அன்பர், அணுக்கர். ஆதலால் கழகத் தொடக்க நாள் பதிப்பே, அறிவறிந்த பெருமகனாராகிய அவர் படைப்புகளைத் தாங்கும் பேறு பெற்றது. அப்பரடிகள் திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், தாயுமானவர், பட்டினத்தார், குமரகுருபரர், சிவஞான முனிவர், மெய்கண்டார் ஆகியவர் வரலாறுகளையும் அவர்கள் நூலாராய்ச்சியையும் தனித்தனியே எழுதுமாறு செய்து வெளியிட்டனர். கா.சு. பிள்ளை எழுதிய திருக்குறள் பொழிப்புரை நூல் வந்த வரலாற்றைக் குறிக்கிறார் வ.சு.
"யான் பகலில் கழகப் பணியை முடித்து விட்டு இரவு 7 மணியளவில் பேராசிரியர் பிள்ளை இல்லத்துக்குப் போவேன். எனக்கு உறக்கம் வரும்பரை அவர் சொல்வதை எழுதுவேன். உறக்கத்தினின்று காலையில் முன்னதாக விழித்தெழுந்திருப்பின், அப்போதும் சிறிது நேரம் அவர் சொல்வதை எழுதுவேன். அப்படி எழுதப் பெற்றதே திருக்குறள் பொழிப்புரை”.
ஒரு நூலைக் கொண்டு வருவதற்கு எப்படி எப்படி முயற்சி யெல்லாம் செய்ய வேண்டியுள்ளது! மாந்தர்களுக்கு வரலாறு இருப்பதுபோல ஒவ்வொரு நூலுக்கும் அது வந்த வரலாற்றை எழுதுதலும், ஆராய்தலும் வேண்டும் போலும்! அதனை ஒரு தனித்துறையாக்கி வளர்த்தலும் வேண்டும் போலும்!
கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் தொடர்பு, மூவர் தேவாரங்களையும் பண்முறை சிதையாமல் சீர் சந்தி பிரித்துப் பதிகக் குறிப்புகளும் செப்பமாய் விளங்க அழகிய படங்களுடன் வெளிவரச் செய்தது. அவ்வாறே நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் தொடர்பால், திருவிளையாடற்புராணம் மூன்று காண்டங்களும் விளக்கவுரையும், விளக்கப் படங்களும் பெற்றுத் தனித்தனியே அழகிய பதிப்புகளாக வெளிவந்தன. மேலும் பல உரை நூல்களும், உரை நடை நூல்களும் அவரால் வெளிப் படுத்தப்பெற்றன.