உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

133

இல்லப் பெயர் அகரவரிசை முதலிய நூல்கள் வெளிவந்து மொழியாக்கம் புரிந்தன. 'தமிழ்ப் பாதுகாப்பு நூற்றிரட்டு' எனத் திரட்டாக்கியும் வெளியிடப்பெற்றது. ஒரு திட்டத்தை மேற் கொண்டால் அதனை வெற்றியாக நிறைவேற்றுதற்குரிய வழி துறைகளை யெல்லாம் செவ்வையாக வகுத்துக் கொண்டு அதே கடைப்பிடியாக இருந்து வெற்றி காண்பது வ.சு. அவர்களின் தழும்பேறிப்போய இயல்பு ஆகலின், இத்தகைய நூல்களைத் தமிழ்ப்பாதுகாப்புக்கென வழங்கினார். நூல் வெளியீடு மட்டு மின்றித் துண்டு வெளியீடுகள் பல வெளியிட்டார்.

கூட்டங்கள் கூட்டி அரசுக்கு எட்டச்செய்தார். செந்தமிழ்ச் செல்வி இந்தி எதிர்ப்பின் விளம்பரத் துறையாகவும், வ.சு.வின் இல்லம் இந்தி எதிர்ப்புப் பாசறையாகவும் விளங்கின என்பதைச் செந்தமிழ்ச் செல்வி 1937 ஆம் ஆண்டுச் சிலம்பு முதல் (16) தொடர்ந்து “செய்திகளும் குறிப்புக்களும்" என்னும் பகுதியைக் காண்பார் உண்மை கண்டு மகிழ்வார். தொண்டின் திறம் போற்றுவர். இந்தி எதிர்ப்பாளர்க்குக் கொடி ஒன்று வேண்டு வதாயிற்று. அக் கொடியைத் திட்டமிட்டுத தந்தவர் வ. அவர்களே. வில்லும் கயலும் புலியும் விளங்கும் மூவேந்த கொடியை இந்தி எதிர்ப்ாளர் ஏந்திய கொடியாக்கிய திட்பமும் நுட்பமும் போற்றுதற்குரியதாம். இன்று இம் மூன்று இலச்சினைகளையும் கொண்ட கொடிகள் பலப்பல உலாவரக் காண்பதெல்லாம் திரு.வ. சு. அவர்கள் அன்று கண்டதன் வழி வந்தனவேயாம்.

இன்னும், "இந்தியால் தமிழ்கெடுமா?" எனத் தலைப்ப மைத்து வினாத்தாள் ஒன்று அச்சிட்டு மொழித்துறை, அரசியல் துறை வல்லார்க்கெல்லாம் விடுத்து அவர்கள் கருத்துகளை எழுதிப் பெற்றுப் பல்லாயிரம் படிகள் அச்சிட்டு நாடெங்கும் வழங்கினார். "இந்தி ஒழிக; தமிழ் வாழ்க" என அட்டைகள் அச்சிட்டு வழங்கினார். தமிழுக்கு ஜே என்னும் முழக்கத்தைத் 'தமிழ் வாழ்க' என மாற்றிய பெருமை வ.சு. அவர்களுக்கு உண்டு.

தவத்திரு. மறைமலையடிகளாரை அணுகி இந்திபொது மொழியா? என்னும் தலைப்பில் அது பொதுமொழியாதற்குரிய தகுதி சிறிதும் அற்றது என்பதை அறுதியிட்டு உரைக்கும் நூலை எழுதி வாங்கி, ஈழத்துச் சிவானந்த அடிகள் துணையால் 15,000 படிகள் அச்சிட்டு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் பரவச் செய்தார் வ.சு.