உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




278

ஒரு வருத்தம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

“விலைவாசி கூடுகின்றது; அக்கூடுதலைக் காட்டிக் கூட்டம் திரண்டு போராட்டம் செய்கின்றனர். அரசு சம்பளத்தை உயர்த்துகின்றது. இங்கே வேலை பார்ப்பவர்களுக்கும் விலைவாசி கூடத்தான் செய்கின்றது. அதற்கு ஏற்றபடி சம்பளத்தை உயர்த்த முடியவில்லை விருப்பூதியமெனத் தரவும் இயலவில்லை. ககம் கூட்டுப்பங்கு நிறுவனம். ஆக்கந்தரும்நூலையன்றிப் பணத்திற்காக மற்றை நூலைவெளியிடாத நிறுவனம்; அறநிலையங்கள் பலவற்றையும் காக்கவேண்டிய நிறுவனம். பங்காளிகளுக்கு 6 விழுக்காட்டுக்குக் கூட ஆதாயம் தர இயலாத நிறுவனம். இந்நிலையில் தொழில்புரிபவர் சம்பளத்தை எப்படிஉயர்த்த முடியும்? இதுதீராத சிக்கலாகவே உள்ளது. போதாது என்று உணர்ந்தும் நிறைவேற்ற முடியாத ஒன்றாகவே உள்ளது” என்று பல்கால் ஆட்சியாளர் வருந்திக் கூறுவர். உண்மையான இவ் வருத்தத்திற்குத் தீர்வு ஏற்படின் ஆட்சியாளரினும் அலுவல் புரிவார் உவப்புறுவர் என்பது உண்மை.

பொறுத்தலும் மறத்தலும்

புலவர்கள் புலமை மிக்கவர்கள்; அதே பொழுதில் குழந்தை போலக் கரவின்றி மனத்திற்குத் தோன்றியதை அப்படி அப்படியே சொல்லவும் கூடியவர்கள். பொருள்முடையால்அப் பொருட் காதல் மீக் கூர்ந்தவர்கள். அத்தகையவர்கள் சிலவேளைகளில் கடுமையாக நடந்துகொள்வது இயற்கை. கண்டித்து எழுதி விடுவதும் உண்மை! உணர்வுப் பெருக்கில் நின்று உரைப்பார்க்கு உணர்வுப் பெருக்கான உரையே மறுமொழியாயின் ஒன்றுபடுதல் உண்டோ? இத்தகைய பொழுதில் "இவர் தன்மை இருந்தவாறு இது? என் தீயூழ் இவரிடம் இது கேட்க வைத்திருக்கிறது என்று தம்மைத் தாமே நொந்துகொண்டு திரு.வ.சு. ஒதுங்கிவிடுவது உண்டு. நிகழ்ந்ததைப் பொறுத்து மறந்து விடவும் செய்வர். பின்னே நான் இப்படி நடந்துவிட்டேனே என்று வருந்தும் நிலைக்கு ஆளானவர் தாமே உறவாட வருவதுண்டு. அவ் வேளையில் முன்னைய நிகழ்ச்சியை மறந்து மும்மடங்கு கெழுதகைமையொடு தழுவிக் கொள்ளல் ஆட்சியாளர்க்கு இயல்பு. அம்மட்டோ! அவர்க்கும் பழைய உரிமை அன்பால், உரிமையும் பாராட்டும் செய்து உவப்பதும் உண்டு.