இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
க
கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
315
புல்லென்றது ஈர்த்துப் பிடித்து ஆட்கொள்ளும் இன்பச் செயலன்றோ இம் மணிவிழாப் பாராட்டு. இனி எற்றைக்கும் உங்கள் இன்ப அன்புறவில் இருந்து மகிழ்வேன்.
"அன்று உங்கள் அருமை யண்ணலின் அன்பிற் பிணிப்புற்ற என் தமிழறிவு உங்களது உயரிய தூய நட்பால் சிறந்து நீங்கள் அன்பு கனிந்து பாராட்டுமளவை அடைந்தமைக்குக் காரணம் நீங்களே என்பதையும் நான் மறவேன்; மறந்தால் கெடுவேன் என்பதையும் நான் நன்கறிவேன். செந்தமிழ்த்தாயின் திருவருளால் உங்கள் பணி சிறந்து மேன்மேலும் உயர்வதாக. தமிழறிஞர்கட்கு வாழ்வளிக்கும் உங்கள் உள்ளம் பனிபடு இமையமால் வரையினும் பெரிது; நிலத்தினும் பெரிது; நீரினும் ஆரளவின்று. அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயண்ணல் திருவருளால், அவனது அருள்போல் பெருகிய வையை மணலினும் பல்லாண்டு வாழ்க".