உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. கழகக் கால்கோள்

(ஓடத்தை ஓட்டுதற்காகத் துடுப்பு வலிக்க முனைந்தான் அவன். ஆனால், ஒரு கப்பற்காரன் தானே அவனைத் தேடிவந்து அக் கப்பலுக்கு மீகாமன் ஆக்கி விட்டான்.)

நூற்பதிப்புக் கழகத்தின் சிறப்பை அறிந்தோம். நூற்பதிப்புக் கழகச் சிறப்பு என்பது என்ன? அதனைத் தோற்றுவித்துக் கட்டிக் காப்பவர் சிறப்பேயன்றோ!

கொழும்பிலே தோன்றிய திருசங்கர் கம்பெனி ஓராண்டே ஆங்கு நடைபெற்றது. அந் நிறுவனத்தின் மேல் அரங்கர்க்கு உண்டாகிய பற்றும், தொழில் திறமும் அதனையே தம் வாழ்வுக் கடமையாகக் கொள்ள ஏவியது. ஆதலால் அதனைத் தாய்த் தமிழகத்திலே நிறுவிப் பணிசெய்வதே முறைமையும் கடமையுமாம் என முடிவு செய்தார். முடிவு ஒன்று எடுத்துவிட்டால் உடனே அதில் முழுமூச்சாக இறங்கிப் பணிசெய்வது அவர் தன்மை. ஆதலால் கொழும்பில் இருந்து பாளைக்கு வந்தார். ஆங்கிருந்து சென்னைக்குச் சென்றார். அடிகளாருடன் கலந்து உரையாடினார். பின்னர்ச் சென்னை, பவழக்காரத்தெரு 2 ஆம்எண் (புது எண் 87) கட்டிடத்தில் இருந்த தெருப்பக்கத்து அறையில் திருசங்கர் கம்பெனியைத் தொடங்கினார்.

திருசங்கர் கம்பெனியைச் சென்னையில் தொடங்கிய அன்றே பாளையங்கோட்டையில் உள்ள தம் இல்லத்தில் அதன் கிளை நிலையம் தொடங்கப்பெற்றது. அரங்கர் சென்னை நிலையப் பொறுப்பைப் பார்த்துக் கொண்டார். இளவல் வ.சு. கிளைநிலையப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தமிழகத்தின் வட எல்லையிலும், தென் எல்லையிலும் திருசங்கர் கம்பெனி ஒரேவேளையில்இருகிளைகளை விரித்தது. அது தமிழ் உலக முழுவதும் தண்ணிழல் பரப்புதற்குரிய ஒரு பெருவாய்ப்பு உண்டாதற்குத் தூண்டுகோலாயிற்று. "நாள் செய்வதை நல்லவர் செய்யார்" என்பது பழமொழி. நாளும் நல்லவரும் சேர்ந்து செய்தால்நடவாதனவும் நடக்கும்; நிகழாதனவும் நிகழும்!