உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

கழகத்தின் முதற்பொருள் உரூ. 50,000 என்றும், அது பங்கு ஒன்றுக்கு உரூ. 10 விழுக்காடு 5000 பங்குகளாகக் கொடுக்கப்படும் என்றும், திருவரங்கனாரும் திரவியம்பிள்ளையும் கூட்டமைச்சர் களாக இருந்து கழகத்தை நடத்துவது என்றும், கழகம் பதிவு செய்யப் பெற்ற காலம் முதல் இருபத்தைந்து ஆண்டுகள் அவர்களும் அவர்கள் வழித்தோன்றல்களும் அமைச்சர் களாகவும் கழகச் செயல் குழு உறுப்பினர்களாகவும் விளங்கிக் கழகத்தை நடாத்தும் உரிமை உடையவர் என்றும் உறுதிமுறி எழுதப்பெற்றது. பின் 'திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட்' எனும் பெயரால் 21-9-1920 இல் திருநெல்வேலியில் கழகம் பதிவு செய்யப்பெற்றது. திரு. வ.சு.பிறந்த செப்டம்பர் 22ஆம் நாள். கழகம்பதிவு செய்யப் பெற்ற நாள் செப்டம்பர் 21 ஆம் நாள். இந் நாள்நெருக்கம், இவர்க்கும் கழகத்திற்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டும் முதற்குறிப்புப் போலும்.

கழகம் பதிவானதும் அரங்கனார் திருநெல்வேலியிலேயே தங்குதற்கு நேர்ந்தது. அதனால்அவர் சென்னையில் நடத்திவந்த திருசங்கர் கம்பெனி புத்தக வணிகத்தைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பினை இளவலாரிடம் ஒப்படைத்தார். 1921 பிப்ரவரித் திங்களில் 'திருசங்கர்கம்பெனி' இருந்த பவழக்காரத்தெரு இரண்டாம் எண் அறையிலேயே கழகக் கிளைநிலையம் தொடங்கப்பெற்றது. அதன் முகவராக வ. சு. அமர்ந்தார். அது முதல் புத்தகவணிகம் கழகத்தின் பெயராலலேயே நடை பெறலாயிற்று! திருசங்கர் கம்பெனி என்னும் சிற்றாறு, கழகப் பேராற்றுடன் கலந்து ஒன்றாகி அமைந்தது.

கழகத்திற்குத் திரவியம்பிள்ளை வழியாக வித்திட்டவர் திரு. விசுவநாதபிள்ளை அல்லரோ! அவர் பத்து உரூபா பெறுமான நூறு பங்குகளை உவப்புடன் ஏற்றுக்கொண்டார். திட்டப்படி 5000 பங்குகள் அல்லவோ வேண்டும்? அமைச்சர்கள் இருவரும் பங்குகள் சேர்ப்பதில் முனைந்தனர். திரவியம்பிள்ளை பல திறப்பணிகளில் ஈடுபட்டவர். வாய்த்த பொழுதுகிளில் மட்டும் கழகப்பணிகளில் கருத்துக் கொள்வார். அரங்கரோ 'ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்' கழகத்தொண்டுக்கே ஆளாக்கிப் பணிசெய்தார். கழகம் கால்கொண்டது.