சொற்பொருள் நுண்மைவிளக்கம்
மாடகம்: (1) பாலிகை வடிவான விசிக்குங் கருவி.
231
(சீவக. 1697. நச்.)
(2) இஃதொரு யாழ் உறுப்பு. மாடம் +அகம் = மாடகம் என ஆயிற்று. இதன் பெயரில் இருந்தே இவ்வுறுப்பு ஓர் சிற்றகத்தை அஃதாவது ஒரு சிறு உள்ளிடத்தைத் தன்னில் அமையப் பெற் றுள்ள ஒரு மாடம் போன்ற உருவினைக் கொண்டிருத்தல் வேண்டுமென நாம் அறிகிறோம். (பாணர் கைவழி. 105.)
மாடு: (1) மாடு= செல்வம். இது ஒரு பழைய பொற்காசைக் குறித்த மாடை என்னும் சொல்லின் திரிபாகக் கருதப்படுகின்றது. மாழை - பொற்கட்டி. மாழை- மாடை (மாஷ- வடசொல்)
பண்டைக் காலத்தில் உலக மெங்கும் கால் நடையே செல்வமாகக் கருதப் பட்டதினால் 'மாடு' என்னும் விலங்குப் பெயரே செல்வம் என்னும் பொருளைத் தழுவிற்றென்று கொள்வதே மிகப் பொருத்தமாம்.
(2) ‘மாடு நின்ற அம்மணி மலர்ச்சோலை' புக்கான் அநுமன் என்பர் கம்பர். பசுமாடு, காளைமாடு என்று பொருள் செய்தால் எளிய சொல் என்பீர்கள். கால்மாடு தலைமாடு என வழங்குகின்றோமே காற்பக்கம், தலைப்பக்கம் என்பதன்றோ உரை. மாடு - பக்கம். எனவே கம்பர் தொடருக்குப் பக்கத்து வானளவு உயர்ந்து நின்ற சோலை என்பது பொருள். 'மாடல்ல மற்றையவை' என்ற திருக்குறளுக்குப் பிற செல்வங்கள் கல்விச் செல்வத்தின் பக்கம் இருப்பத் தகுதிஅற்றன எனப் பொருள் சய்யலாம். (தொல்காப்பியப் புதுமை. 77.)
மாண்டார்: மாண்டார் என்ற வினையாலணையும் பெயர் இறந்தாரையே பெரும்பாலும் குறிக்கும். ஆனால் “மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர்” என்ற திருக்குறள் மொழியில் அதற்கு மாட்சிமை உடையவர் எனப் பொருள் காண வேண்டி யிருத்தலின் ‘மாள்' என்ற அடியாகப் பிறக்கும் மாட்சி, மாண்பு முதலியவற்றுடன் மாளுதலையும் சேர்த்துணர்த்தலே தகுதி.
(மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 86.)
மாதம்: மாதம் என்ற சொல்லே தமிழ்ச் சொல்தான். மதி என்பதில் இருந்து தோன்றியது. (பழந்தமிழ். 233.) மாதர்க்கோலம்: கண்டு எவரும் காதலிக்கப் படும் ஒப்பனை.
(சிலப். 5: 74. அடியார்.)