உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

265

வே

வே: 'வே' என்னும் பகுதி ககர வுகரம் விரியப்பெற்று வேகுதல் வேகுகை எனத் தொழிற் பெயராகும். இறந்த காலத் திலே முதல் குறுகி வெந்து, வெந்த, வெந்தான் முதலியனவாயும் மற்றைக்காலங்களிலே வேகின்ற, வேகுது, வே, வேவ முதலியன வாயும் வரும். வே என்பதினின்று வேங்கை, வேது, வேவை, வேனல், வெப்பர், வெய்யோன் முதலிய பெயர்கள் பிறக்கும். வேகுது - வேகின்றது. "வேகுதே தீயதனில்" (பட்டண) வேங்கை பொன். வேது - வெம்மை "வேதுகொண்டு விழையுநெறி விரும்பி" (சேது புராணம்) வேவை- வெந்தது. “பராரை வேவை பருகெனத் தண்டி” (பொருந) வேனல் - கோடை.“வேனன் மல்கி வெண்டேர் சென்ற” (சிந்தா.) வெப்பர் - வெம்மை. "வெப்பராற் றட்பமாற்றி” (சிந்தா.) அர்-போலி என்பாரும் உளர். அன்றி வெச்செனவு என்பதும் இதன்பாற்று. வெச்செனவு - வெம்மை. "தண்ணெனவும் வெச்செனவும் தந்து” சேது புராணம்.

(செந்தமிழ். 11: 118-119.)

வேகம்: வேகு + அம் = வேகம். கொதிப்பு, கடுமை, கடுஞ் செலவு. சுறுசுறுப்பு, சூட்டிக்கை என்பனவும் நெருப்புக் குறித்த சொல்லினின்று பிறந்தவையே. தீப்பற்றிய பொருள்கள் விரை வாய் வெந்துவிடுவதால் விரைவு வேகம் எனப்பட்டது.

(புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 359.)

வேங்கை: வேங்கை என்ற சொல்லும் செம்மையான கை என்ற பொருளில் புலியினுடைய வலிய கையைக் குறித்து வழங்கியதாகத் தெரிகின்றது. புலி பிற விலங்குகளை வேட்டை யாட அதன் முன்கால்களையே, அஃதாவது, கைகளையே பெரிதும் பயன்படுத்துகின்றது. புலியின் கையும் வாயும் கொடி யவை எனக் கருதினமையால் வேங்கை, கடுவாய் என்ற பெயர்கள் தோன்றின.

(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 259-260)

வேணவா: (1) வேட்கையாவது பொருள்கள் மேல் தோன் றும் பற்றுள்ளம். அவாவாவது அப்பொருள்களைப் பெற வேண்டும் என்று மேல்மேல் நிகழும் ஆசை. எனவே வேட் கையால் உண்டாகிய அவாவென மூன்றன் உருபு விரிந்தது.

(தொல். எழுத்து. 248, நச்.)