சொற்பொருள் நுண்மைவிளக்கம்
267
வேளாளர்: வேளாளர் ஏனைமக்களை நோக்கிச் செய்யும் ஈகையும் விருந்தோம்பலும் மக்கள் வேள்வி எனவும், ஏனைச் சிற்றுயிர்களைப் பாதுகாத்தற் பொருட்டு அவர் மேற்கொண்டு ஒழுகும் கொல்லா அறம் உயிர்வேள்வி எனவும், இறந்துபட்டதம் முன்னோரை நோக்கிச் செய்யும் நன்றிக் கடன் தென்புலத்தார் வேள்வி எனவும் இவ்வாறு பிறர்க்காற்றும் உதவி பயன்தரற் பொருட்டு இறைவனை நோக்கிச் செய்யும் வழிபாடு கடவுள் வேள்வி எனவும் தமக்கும் பிறர்க்கும் அறிவை விளக்கி முயற்சியைப் பயன் பெறுவிக்கும் நூலோது முறை கலைவேள்வி எனவும் ஆன்றோரால் வகுத்துரைக்கப்பட்டன. இங்ஙனமாக ஐவகை வேள்விகளையும் ஆள்பவராகலின் பண்டைத் தமிழரில் நன்மக்கள் வேளாளர் எனப்படுவார் ஆயினர்.
(வேளாளர் நாகரிகம். 3 -4) வேளைக்காரர்: கண்ணினைக் காக்கும் இமைபோல் அரசற்குக் காலத்தில் உதவிபுரியும் வீரரும் முற்காலத்தில் ருந்தனர். அன்னார் அணுக்கப் படையினர்; உற்றவிடத்து உயிர் வழங்கும் பெற்றியர். உடுக்கை இழந்தவன் கைபோல் இடுக்கண் வந்த வேளையில் ஏன்று உதவிய அவ்வீரர் வேளைக் காரர் என்று அழைக்கப்பெற்றார். தஞ்சைச் சோழ மன்னர் சேனையில் வேளைக்காரப் பட்டாளம் ஒன்று சிறந்து விளங் கிற்று. ஆபத்துவேளையில் அஞ்சல் என்று அருள்புரியும் முருகவேளை வேளைக்கார பெருமாள் என்றார் அருணகிரி நாதர். (தமிழர் வீரம். 11.)
வேற்றுமை: வேற்றுமை என்னும் பொருண்மை என்னை எனின் பொருள்களை வேற்றுமை செய்தலின் பெயர் முதலிய எட்டற்கும் வேற்றுமை என்னும் பெயர் ஆயிற்று.
(தொல். சொல். 63. கல்.)