உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

67

ஆனால், தத்துவ ஞானம் கைவரப்பெற்ற பின்னரே எழுத்துக்களுக்கு உயிர், மெய் என்ற பெயரிட்ட முன்னோர்கள், இறைவன் இந்த உயிரை உடலோடு சேர்த்து இயங்குமாறு செய்ததன் நோக்கம், அந்த ஆன்மாவானது உய்தி பெறுதற்கு, அதாவது ஈடேறுவதற்குத்தான் என்றறிந்த அவர் ‘உய்' என்ற பகுதியின் அடியாக அந்த உயிர் என்ற பெயர் கொடுத்திருக்க வேண்டுமென்று கருதினால், அது

தவறாகாதன்றோ?

(கட்டுரைப் பொழில். 143)

உயிர்க்குறுக்கம்: சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங் கோல் ஆகாது. அதுபோல உயிரது குறுக்கமும் உயிரேயாம். (உயிர் குறுகிய எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் என்பவை.) (தொல். எழுத்து: 2.நச்)

உயிர்மெய்: (1) மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெறநிற்கும் என்றமையால் அக்கூட்டம் பாலும் நீரும் போல உ ன் கலந்ததன்றி விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தன அல்ல என்பது பெறுதும். (தொல். எழுத்து. 28. இளம்.)

(2) உயிர்மெய் என்பது உம்மைத் தொகை. (உயிர் மெய்க்கு) மாத்திரை கொள்ளுங்கால் உப்பும் நீரும் போல ஒன்றேயாய் நிற்றலும் வேறுபடுத்திக் காணுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல வேறாய் நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமேயாயவாறு போல உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க.

(தொல் எழுத்து 18. நச்)

உயிர்மெய்க்கு அளவு: ‘அ’ என்புழி நின்ற அளவும் குறியும் ஒன்று என்னும் எண்ணும் ‘க’ என நின்ற இடத்தும் ஒக்கும். ‘ஆ என்புழி நின்ற அளவும் குறியும் ஒன்றென்னும் எண்ணும் ‘கா’ என நின்ற இடத்தும் ஒக்கும்... ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை எனின் நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரை நாழி உப்பில் கலந்துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட் பெற்றி என்று கொள்வதல்லது காரணம் கூறலாகாமை உணர்க. ஆசிரியன் ஆணை என்பாரும் உளர். (தொல். எழுத்து 10. நச்)

உயிர்ப்பு: உயிர்ப்பு என்பது வேண்டிய பொருளைப் பெறாதவழிக் கையற வெய்திய கருத்து. அது நெட்டுயிர்ப்புக்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றான் என்பது.

(தொல். பொருள். 260. பேரா.)