ஊ
ஊக்கம்: ஊக்கம் என்பது உள்ளமானது மேம்படக் கருதும் மேற்கோள் என்றவாறு. (திருக். 382. காலிங்) ஊக்கமுடைமை: அஃதாவது மனம் மெலிதல் இன்றி வினை செய்வதற்கண் கிளர்ச்சி உடைத்தாதல்.
(திருக். ஊக்கமுடைமை. பரி.)
ஊகம்: செம்முகக் குரங்கையும் (குரங்கு) கருமுகக் குரங்கையும் (முசு) கூறிய சங்கப் புலவர்கள் அவற்றினின்றும் பிரித்துக் காட்டவே அழகாக, பொருத்தமாக, நுட்பமாக 'நரைமுக ஊகம்' என்று ஊகக்குரங்கை விளக்கினர்...... இதன் முகத்தைச் சுற்றி நரைமயிர்க் கற்றை தொங்குவதால் தாங்குவதால் இதை நரைமுக ஊகம் என்று கூறினர்.
(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 21.)
ஊசிமுறி: ஊசிமுறி என்னும் பெயர், எழுதுங்காலத்தில் எழுத்தாணியால் எழுத முடியாத ஓசையையுடைய செய்யுட் களையுடைமையாற் பெற்ற காரணப்பெயர்.
(சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும். 39.)
ஊடல்: (1) ஊடல் என்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியான் அன்றி கூற்றுமொழியான் உரைப்பது. (தொல். பொருள். 499. பேரா.)
(2) காதலர் இருவருடைய உட் கருவிகளும் உயிர்களும் ஒன்றை ஒன்று ஊடுருவிக்கொண்டு உள்ளங்கள் சிறத்தலையே ஊடல் என்னும் பெயரால் முன்னோர் வழங்கி வந்தனர். ஊடல் என்பது ஊடுதல், ஊடுருவுதல். உயிர் உணர்வுகள் மேன்மேலும் ருவுதல்.உயிர் நுண்ணிய அகக் கருவிகளூடு ஊடுருவி, அவ்வூடலில் இன்பம் மாட்சிமைப்படுகிறது. (திருக்குறள் அறம். 16.)
ஊர்கோடல்: குறைவின்றி மண்டலமாக ஒளிபரத்தல்; அல்லதூஉம் பரிவேடித்தல் எனினும் அமையும்.
(திருக்கோ. 262. பேரா.