உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

1. இந்திரன் பழி தீர்த்தது

இந்திரன் விருத்திராசுரன் என்பவனைக் கொன்றான். அப்பாவம் நீங்குதற்காக மண்ணுலகில் உள்ள பல கோயில் களுக்கும் சென்றான். எங்கும் அப் பாவம் நீங்காத அவன் கடைசி யாக ஒரு கடம்பவனத்திற்கு வந்தான். அவ்வனத்தின் உள்ளே ஒரு மரத்தின் அடியில் தானே தோன்றியிருந்த இலிங்கத்தைக் கண்டு மகிழ்ந்தான்.

இலிங்கத்தை வழிபடுவதற்காக நறுமண மலர்களை விரும்பினான் இந்திரன். அங்கே பொற்றாமரைக் குளம் ஒன்று தோன்றி மலரொடு விளங்கியது. அம் மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட்டான். அவன் பாவம் நீங்கியது.

அக்கடம்பவனமே மதுரையாகியது. அக்குளமே பொற்றா மரைக் குளமாகியது.

2.வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது

துருவாச முனிவரின் இறையன்புக்கு மகிழ்ந்த இறைவன் அவருக்குத் தாமரை மலர் ஒன்று வழங்கினான். அவர் அம்மலரை அசுரரை வென்ற இந்திரனுக்கு வெற்றிப் பரிசாக வழங்கினார். அதனை யானையின் தலையில் வைத்தான் இந்திரன். யானை தன் கையால் எடுத்துக் காலில் போட்டு மிதித்தது. அதனைக் கண்ட துருவாசர் சினந்து, "உன் ஆட்சி பாண்டியன் ஒருவனால் அழியும். உன் யானை தன் பெருமையிழந்து காட்டு யானையாகும்" எனச் சாபமிட்டார்.

இந்திரன் தன் பிழையை அறிந்து முனிவரைப் பணிந்து வேண்டினான். "நூறு ஆண்டுகள் யானை காட்டில் திரிந்தபின் சாபம் நீங்கும்" என அருளினார்.

வெள்ளையானை கரிய யானையாய்க் காடுகளில் நூறாண்டு திரிந்தது. கடைசியில் கடம்பவனத்திற்கு வந்து பொற்றாமரைக் குளத்தில் நீராடிய பின் வெள்ளை நிறம் பெற்றுச் சாபம் நீங்கியது.