உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம்

31

பெருமையுணர்ந்து பொறுத்தருள வேண்டினான். அவர்கள் கைகள் இயக்கம் அடைந்தன. யானை தான் பறித்த மாலையை அரசனிடம் நீட்டியது. மீண்டும் சித்தர் கடைக்கண் நோக்கினார். யானை கல்யானையாகியது.

22. யானை எய்தது

பாண்டிய நாட்டை விக்கிரமன் என்பவன் ஆட்சி செய்த போது காஞ்சியில் இருந்து ஆட்சி செய்த சோழன் பகை கொண்டான். பாண்டியனை அழிக்குமாறு ஒரு பெரிய வேள்வி செய்து அதில் இருந்து ஒரு கொடிய யானையை வருவித்தான். மதுரையை அழித்து வருமாறு அவ் யானையை ஏவினான். யானை மதுரை நோக்கி வந்தது. வேள்வி செய்த முனிவர்களும் படைவீரர்களும் யானையைத் தொடர்ந்து வந்தனர்.

யானையின் வருகையை அறிந்த பாண்டியன், இறைவனை அடைந்து முறையிட்டான். “பாண்டியனே அஞ்சாதே! நாமே அவ் யானையை அழிப்போம்; உடனே ஓர் அட்டாலை உண்டாக்கு" என்றான் இறைவன். பாண்டியன் பதினாறு கால் அட்டாலை மண்டபம் ஒன்றை உண்டாக்கினான். இறைவன் வேடவடிவில் வில்லும் கையுமாய் அட்டாலைமேல் தோன்றி, யானை மேல் அம்பேவினான். மலை போல் வந்த யானை தலைகீழே சாய, அதனைத் தொடர்ந்து வந்தவர்கள் அஞ்சி ஓடினர்.பாண்டியன் இறைவனிடம் "என்றும் இங்கே இருந்து நீவிர் காக்க வேண்டும்" என வேண்டிக் கொண்டான்.

23. விருத்த குமார பாலரானது

மதுரையில் விருபாக்கன் என்னும் மறையோன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி சுபவிரதை என்பவள். அவர்களுக்குக் 'கௌரி' என்னும் பெயருடைய மகள் ஒருத்தி இருந்தாள். அவள் இளவயதிலேயே 'சக்தி' வழிபாட்டில் ஈடுபட்டு விளங்கினாள். இந் நிலையில், அவர்கள் வீட்டிற்கு வைணவ சமயம் சார்ந்த வாலிபன் ஒருவன் பிச்சையேற்று வந்தான். அவனுக்குக் கௌரியை நீர்வார்த்து மனையாளாகப் பெற்றோர் கொடுத்தனர்.

கௌரி புகுந்த வீட்டினர் வைணவ சமயத்தவர்கள் ஆதலால் அவர்கள் வெறுப்புக்கு ஆட்பட்டாள். ஒருநாள் அவர்கள் வெளியூர்க்குச் செல்லுங்கால் கௌரியை வீட்டில் வைத்துப் பூட்டிச் சென்றனர். சிவவழிபாடு செய்தற்கு வாய்ப்பில்லாமல் வீட்டுள் ஏங்கிக் கிடந்தாள். அப்போது இறைவன் ஒரு முதியவர் வேடத்துடன் கௌரி வீட்டுக்குச் சென்று உணவு கேட்டார்.