திருவிளையாடல் கதைகள்
177
தொண்டுக்கு ஆளான யான் செல்வம் இல்லாமையால் இது வரை மணம் செய்திலேன். பாண்டியன் கருத்துணர்ந்து பாட்டொன்று தரின் யான் வாழ்வேன்" என்றான். இறைவன் 'கொங்குதேர் வாழ்க்கை' என்னும் பாடலைப் பாடித் தந்தான்.
தருமி, அப்பாடலுடன் சங்கத்தை அடைந்து அதனைச் சொல்ல, பாண்டியன் மகிழ்ந்து பொற்கிழி தந்தான். “இப் பாடலில் சொற்குற்றம் இல்லை; பொருட்குற்றம் உண்டு" என்று நக்கீரன் தடுத்தான். பரிசில் பெறுதலை இழந்த தருமி மீண்டும் றைவனை வணங்கி நிகழ்ந்ததை உரைத்தான். இறைவனே புலவனுருவுடன் அவைக்கு வந்தான். "எம் கவிக்குக் குறை சொன்னார் எவர்?" என்றான். நானே சொன்னேன்" என்றான் கீரன். "என்ன குற்றம்? என்றான் இறைவனாக வந்த புலவன். கூந்தலுக்கு மணம் செயற்கையால் வருவது; இயற்கையால் வருவதன்று; ஆதலால் இயற்கையால் வருமென்னும் பாடலில் பொருட்குற்றம் உள்ளது" என்றான் கீரன். "நீ வணங்கும் இறைவி கூந்தலுக்கும் இயற்கை மணமில்லையோ" என்றான் இறைவன். "இல்லை" என்றான் கீரன். நெற்றிக் கண்ணைக் காட்டினான் இறைவன். “உடல் முழுதும் கண்ணே ஆயினும் குற்றம் குற்றமே” என்றான் கீரன். நெற்றிக்கண் வெம்மை தாங்காத கீரன் பொற்றா மரைக் குளத்துள் வீழ்ந்தான். இறைவன் திருவுருக்கரந்தான். 53. கீரனைக் கரை யேற்றியது
நெற்றிக் கண்ணின் வெப்பம் தாங்காமல் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்த நக்கீரன் ஆங்கும் நீங்கக் கண்டிலன். சங்கப் புலவர்கள் அதனைப் பொறுக்கமாட்டாமல் வருந்தினர். கீரனில்லாத சங்கம் நாயகமணி இல்லா மாலை போல் ஆனது. வெற்றிமலையை எடுத்து இராவணனுக்கும் அருளிய இறைவன் கீரனுக்கும் அருள்வான் என்று உருகி நின்று, இறைவனை வேண்டினர். இறைவன் உமையோடு பொற்றாமரைத் தடத்தருகே புலவர் கூட்டத்தில் எழுந்தருளினான். அருட்கண் சார்த்தினான். கீரன் தன் தவற்றை உணர்ந்து, 'கயிலை பாதி காளத்தி பாதி என்னும் அந்தாதி பாடினான். அதனைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் தன் கையால் கீரனைத் தூக்கிக் கரையேற்றினான். கரைக்க வந்த கீரன் இறைவன் இன்னருளை நினைந்து 'கோபப் பிரசாதம்' என்னும் நூலை இயற்றினான். பின்னர்ப் பெருந் தேவ பாணி, எழு கூற்றிருக்கை, ஆகியனவும் பாடினான். 'முன்போல் புலவரோடு சங்கத்திருக்க' என அருளித் தம்முரு மறைந்தான் இறைவன். கீரன் முதலியோர் சங்கமண்டபத்திருந்த பொற் கிழியைத் தருமிக்கு வழங்கினர்.