திருவிளையாடல் கதைகள்
181
இறைவன் வாதவூரரின் பக்குவ நிலையை அறிந்து அவரை ஆட்கொள்ள விரும்பினான். அதனால் பெருந்துறை என்னும் இடத்தில் தான் ஒரு குருவாக அமர்ந்து, தன் கணங்களை மாணவராக்கி ஒரு குருந்தமரத்தின் அடியில் இருந்து அருளுரை வழங்கினான். அவ்வழியே வந்த வாதவூரர் அக்காட்சியைக் கண்டு காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பெனச் சென்றார். தீயிடைப்பட்ட மெழுகென உருகினார். குருவின் அருளுரை கேட்டுத் தம்மை மறந்த பேரின்பத்தில் ஆழ்ந்தார். தொழுத கையொடும் அழுதகண்ணொடும் பாமாலை தொடுத்து இறைவனுக்குச் சாத்தினார். அவர் வாக்கு வளமறிந்த இறைவன் 'மாணிக்க வாசகன்' என்று கூறி மறைந்தான். பின்னர் வந்த பணியை மறந்து கோயில் திருப்பணிக்கே பொருளெல்லாம் செலவிட்டார் மாணிக்க வாசகர். ஆடித்திங்களில் குதிரைவரு மென்று அரசற்குக் கூறுமாறு உடன்வந்தவரை விடுத்தார். அந்நாளில் குதிரை வாராமை கண்டவேந்தன் உடனே ஓலை விடுத்தான். என் செய்வதென ஏங்கினார் வாதவூரர். அன்று கனவில் தோன்றிய இறைவன், "நீ முன்னே செல்க! யாம் குதிரையுடன் வருவோம்" என்றான். மாணிக்கவாசகர் மதுரை சேர்ந்தார்.
59. நரிபரியாக்கியது
வாதவூரர் குறித்த நாளில் வராமையால் பாண்டியன் அவரை அழைத்து வினாவினான். மூன்று நாளில் குதிரை வருமென்றார். அவ்வாறும் வாராமையால், ஏவலரை அழைத்துத்
தண்டியுங்கள் என்றனுப்பினான். ஏவலர் வாதவூரரைக் கல்லேற்றியும், கிட்டியிட்டும் துன்புறுத்தினர். இரவுப் பொழுதாகச் சிறையில் அடைத்தனர். இறைவனை இறைஞ்சி நின்றார் வாதவூரர். இறைவன் அடியார்க்கு உதவுதலை விரும்பிக், காட்டிலுள்ள நரிகளையெல்லாம் பரிகளாக்கிக் கொண்டுவருமாறு நந்திதேவர்க்கும் பூதகணத்தவர்க்கும் கட்டளையிட்டான். அவர்கள் அனைவரும் பாகராகிக் குதிரைகளுடன் வந்தனர். கடற்பெருக்கெனவந்த பரிகளைக் கண்டவர் அரசர்க்கு உரைக்க அவன் வாதவூரரை விடுவித்துச் சிறப்புகள் பல செய்தான். ஆயினும் பரிகள் சிறிதுபோது வரத் தாழ்த்தமையால், பொய்யென்றெண்ணி வாதவூரரை மீண்டும் வருத்தினான். அப்பொழுதில் வானம் மறைக்கப் புழுதியெழுப்பிக் கொண்டு குதிரைகள் வந்தன. குதிரைத்தலைவனாக வந்த இறைவன் பாண்டியனிடம், "இன்று நாம் கயிறு மாற்றிக்