உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

-

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

தமிழ்நாடு, 'தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம்' என்றும், தமிழ் வேந்தர், 'தமிழ் கெழு மூவர்' என்றும் குறிக்கப் பெறுவர். எனினும், மூவேந்தருள் ஒருவனாம் பாண்டியன், தமிழ்மாறன் எனவும், 'தமிழ்நர் பெருமான்' என்றும் சிறப்பிக்கப் பெறுவான். பாண்டி நாட்டு வையை, தமிழ் வையை யாகவும், பொதியம், தமிழ்ப் பொதியமாகவும் விளக்கமுறும்.

தமிழுக்கும் பாண்டியர்க்கும் உள்ள தொடர்பு, பிரிவு அறியாப் பெருமையுடையது. அதனை முழுதுணர்ந்த பாண்டிய நாட்டுப் புலவர் குமரகுருபரர் 'தென்னன்தமிழ்' என்று அழகொழுகக் கூறினார்.

தமிழை ஊனாகவும் உயிராகவும் உணர்வாகவும் கொண்ட தமிழ்ப் புலவர்கள், பெற்றெடுத்த பெருவாழ்வுடைய பேரன்னை, தன் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சிக் குலாவுவது போலத் தமிழைக் கொஞ்சிக் குலாவினர். அருந்தமிழ், இன்றமிழ், ஒண்டமிழ், கலைத்தமிழ், கவின்தமிழ், கன்னித்தமிழ், செந்தமிழ், செழுந்தமிழ், வண்டமிழ், தண்டமிழ், திருத்தமிழ், தீந்தமிழ், தேன் தமிழ், நற்றமிழ், நறுந்தமிழ், பழந்தமிழ், பைந்தமிழ், முத்தமிழ் என்று இன்னவாறு நூற்றுக் கணக்கான அடைமொழிகள் தந்து பூரித்தனர்.

'தமிழ்' என்பது இலக்கிய நூல்களில் 'தமிழ்மொழி' என்னும் பொருள் குறிக்கும் அளவில் நின்றுவிடவில்லை, அது தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ்க்கலை, தமிழ்ப்பண்பாடு, தமிழர்வீரம், தமிழர் வாழ்வு முதலியவற்றை யெல்லாம் குறிக்கும் வளமிகு சொல்லாக வழங்கப் பெற்றுள்ளது. இதனால் தமிழ் வாழ்வே தமிழர் வாழ்வென முந்தையோர் கண்டனர் என்பது வெளிப்பட விளங்கும். இவ்விளக்கமே, தமிழ்ப்பாண்டியரைத் தமிழ்ச் சங்கம் வைக்கத் தூண்டித் துலங்கச் செய்தது என்பதும் விளங்கும்.