4. நான்காம் தமிழ்ச் சங்கத் தோற்றம்
பாண்டித்துரை மதுரைக்கு வந்து சிலகாலம் தங்கினார்; தங்கிய அவரைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய மதுரை மக்கள் சிலர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தனர். அது தொடர்பாகப் பார்த்தற்குத் திருக்குறளும், கம்ப ராமாயணமும் விரும்பினார் தேவர். பார்த்துத் திருப்பித் தருமளவில் எவரிடமும் அந்நூல்களை வாங்கிப் பயன்படுத்த நேர்ந்தது பாண்டித்துரையார்க்கு அந்நூல்களைப் பணந்தந்து வாங்குவது ஒருபொருட்டில்லை! ஆனால் 'தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மதுரை'யில் தமிழ் இருக்கும் நிலை வெட்ட வெளியாயிற்று. அந்நிலை பாண்டித்துரையார் உள்ளத்தை வெதுப்பிற்று! "தமிழுக்குப் பெருமை சேர்க்கும் சீர்மையதும், தமிழ்மறையாய் அமைந்ததுமாகிய திருக்குறள் கிடைக்க வில்லை! தென்னுண்தேனின் செஞ்சொற் கவியாம் கம்பராமாயணமும் கிடைக்கவில்லை! மற்றைய நூல்கள் தாமோ கிடைக்கும்? மதுரையார் நிலை என்னே! என்னே!" என ஏங்கினார். அவ்வேக்கம் ஆக்கப் பணிக்கு ஏவியது. எந்தத் துலங்குதலுக்கும் ஒரு தூண்டுதல் வேண்டுமே!
1901 ஆம் ஆண்டு மேமாதம் 21, 22, 23 ஆம் நாள்களில் சென்னை மாநில அரசியல் மாநாடு மதுரை மாநகரில் கூடியது. அதன் வரவேற்புக்குழுத் தலைவராகப் பாண்டித்துரை இருந்தார். மூன்றுநாள் நிகழ்ச்சிகளும் முறையே நிறைவேறிய பின்னர், அப்பேரவையில் பாண்டித்துரையார் மதுரையின் பழஞ்சிறப்பையும், அதன் வளர்ச்சி குன்றிய அக்கால நிலை யையும் எடுத்துரைத்தார். மதுரையில் தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கத் தாம் கருதியிருக்கும் கருத்தை வெளியிட்டார். மாநாடு நிறைவுற்ற மறுநாள் சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நிகழப் போகும் தமிழ்ச்சங்க ஆய்வுப் பேரவைக்கு அரசியல் பெருமக்களும், நகரப் பெருமக்களும் வந்திருந்து சிறப்புச் செய்யவும் கருத்துரை வழங்கவும் வேண்டிக் கொண்டார். அதன் படியே பேரவை கூடியது. அவைத் தலைமையேற்ற பாண்டித் துரையார் தாம் கொண்டிருக்கும் கருத்துகளையும் ஆக்கச்