உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

-

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

பெரிது; ஒரு நாள் வெயிலில் நடந்து வந்த களைப்பால் தம் கட்டிலிலே நாராயணர் அயர்ந்து உறங்கினாராக, அவரை எழுப்புதற்குச் சென்ற ஏவலனைத் தடுத்துக், கட்டிலன் பக்கல் ஒரு நாற்காலியிட்டு அமர்ந்து, தாமே விசிறிக் கொண்டு விசிறிக் 'கவரி வீசிய இரண்டாம் காவலராக விளங்கியவர் பாண்டித்துரை. இவ்வுருக்கமான நினைவுகளையெல்லாம் ஒருங்கே கொண்டு, இருக்கும் வரையும் பெருக்கமான பணி செய்தார் நாராயணர்.

நாராயணர் பணியை உடனிருந்து கண்ட மு. இராகவ ஐயங்கார்,"நூற்றுக்கணக்கான மாணவருக்குத் தமிழறிவூட்டி அக் கல்வித்துறையைப் பரவச் செய்து தமிழ்க் குலபதியாக விளங்கியவர் அதன் கலாசாலைத் தலைமைத் தமிழாசிரியராய் இருந்த திரு.நாராயண ஐயங்கார் அவர்களே என்பதை நாம் இங்கே குறிப்பிடத் தகும்" என்கிறார்.

தமிழ், வடமொழி, மந்திரம், மருத்துவம், சோதிடம், தருக்கம் இன்னபலவற்றில் நாராயணர் சிறந்து விளங்கினார்; போதிக்கும் திறம், எழுத்தாற்றல், ஆராய்ச்சி ஆகியனவும் கொண்டிருந்தார். இவையெல்லாம் அவர் மேற்கொண்ட பணிக்குப் பெருமை சேர்த்தன. நாற்பது ஆண்டுகளுக்குமேல் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலைத் தலைமையாசிரியராக விளங்கி அவர் செய்தபணியால், தமிழ்நாடு தமிழறிஞர்கள் பலரைப் பெற்றுச் சிறப்புற்றது. தமிழ் மொழிக்கு ஆக்கங்கள் செய்யவல்ல அறிஞர்களும் சங்கத்தின் வழியே உருவாகி அரிய தொண்டுகள் செய்தனர்.

சங்கக் கல்லூரி ஆசிரியர்களாக விளங்கியவர்களுள் குறிப்பிடத்தக்க பேரறிஞர் அரசஞ் சண்முகனார் ஆவர். மேலும் சுந்தரரேசுவரஐயர், கோபாலையர், நல்லசிவன் பிள்ளை கே. சிவஞானம்பிள்ளை, அப்பனையங்கார், இராமானுச ஐயங்கார் என்பாரும் ஆசிரியர்களாக இருந்தனர். இவர்களும் அவரவர் திறங்காட்டிக் கற்பித்ததுடன், செந்தமிழ் இதழில் கட்டுரையும், கவிதையும் வரைந்துளர். சங்கத்து விழாக்களில் பங்கு கொண்டுளர்; தேர்வுப் பொறுப்பாளராகக் கடமை புரிந்துளர், இவர்களுள் பின்னவர் இருவரும் நாராயணருக்குப் பின்னே தலைமையாசிரியராகவும் இருந்தனர். சங்கம், எண்பது ஆண்டுகளின் முன்னே தோன்றியது. அதனைத் தோற்றுவித்த பெருமக்கள் கொண்ட நல்லதிட்டங்கள் இன்றைக் குடியரசாலும் செய்யப் பெறாவாய் அமைகின்றன.