316
இளங்குமரனார் தமிழ்வளம் -31
இதே விழாவில் கருத்தரங்கத் தலைமையேற்ற பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் பல்கலைக் கழகமாதல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
'மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் படித்துப், பட்டம் பெற்று வெளியே வந்தால் அங்கே நல்ல திறமையிருக்கும். நன்றாக இருப்பார்கள் என்று தெரிந்து அவர்களே வரவேற்பார்கள். எங்களுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் படித்தவர்கள் தாம் வேண்டும் என்று கேட்பார்கள். அப்படியும் ஒரு சூழ்நிலை உருவாகாமல் போனால் நாம் வருந்த வேண்டும். சிறப்பாய் ஒரு தனிப்பல்கலைக் கழகமாக இருந்து தனிப்பட்டங்களை வழங்கலாம். அதற்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, மற்ற முயற்சிகளையெல்லாம் தவிர்த்து இந்தச் சங்கமானது தனிப்பல்கலைக் கழகமாக உருவாகி நல்ல தமிழ்ப் புலவர்களை உயர்ந்த தமிழ்ப் புலவர்களை உருவாக்கக் கூடிய சூழ்நிலையை உண்டாக்குதல் தமிழரின் கடமையாகும்.
பேராசிரியர் கிழக்காசிய நாடுகளுக்குத் தமிழ்த் தூது செல்லவிருந்தபோது 10.9.71 இல் சங்கச் சார்பில் வழியனுப்புப் பாராட்டுவிழா நிகழ்ந்தது. அப்பொழுது, "மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் 49 தமிழறிஞர்களை மதிப்பியல் புலவர்களாகச் சேர்த்து ஒரு மன்றம் இச்சங்கத்தில் அமைக்க வேண்டும். அப்புலவர் மன்றம் தமிழ் நாட்டில் வெளியாகும் நல்ல நல்ல நூல்களை நாடி அறிந்து அவற்றிற்குப் பரிசளித்துச் சிறப்புச் செய்தல் வேண்டும். பயிற்சி மொழி தமிழே என்ற தமிழ்நாடு அரசின் கொள்கையினைத் தமிழ்ச் சங்கம் பல வகையாலும் முயன்று பரப்புதல் வேண்டும். தனித் தமிழ் இயக்கத்தை இச்சங்கமே முன்னின்று நடாத்துதல் வேண்டும் என்னும் கருத்துகளை வெளியிட்டார்.
பாண்டித்துரையார் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட குன்றக்குடி அடிகளார், "நாட்டு நிகழ்ச்சிகளின் விளைவுகளையும், எதிர்விளைவுகளையும் நன்றாக ஆராய்ந்து அதற்கு முடிவுகட்டும் பொறுப்பு இச்சங்கத்திற்கு உண்டு. அதனை நிறைவேற்றுவதற்குத் தக்கவாறு மீண்டும் தமிழ்ப் புலவர் பேரவையைக் கூட்டி நடாத்துதல் வேண்டும்" என்றும், "தமிழ்ச் சங்கங்களையும் தமிழமைப்புகளையும் தன்னொடும் இணைத்துக் கொண்டு தமிழ்ச் சங்கம் தலைமை தாங்கி வழிகாட்டுதல் வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.