உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

107

வெளிப்பட்டுள்ள ஒளியும்கூட வேற்று மொழியாளர் காட்டிய ஆர்வச் சிறப்பால் ஏற்பட்டதேயாம்.

வள்ளலார் கண்ட பொது நிலைக்கோயில் நிலையோ அதன் நிறுவனர் உணர்ந்து உணர்ந்து தெளிந்து தெளிந்து உரைத்த உரைவழியைக் காற்றில் தூற்றிப் பரத்திவிட்டது! திருவருட்பாடல், மெல்லென ஓதி வழிபடல் தவிர்த்து வேற்று மொழி மந்திரம் ஓதி வழிபடும் பிறபிற கோயில்களின் வழிக்கே சென்றுவிட்டது. உருகிச் சொன்னவர் உண்மை நெறிகள் கருகிக் கொண்டு போவதைக் கருத்துள்ளோர் இப்பொழுதேனும் எண்ணிக் கடனாற்ற வேண்டும்.

“செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும்'

என்றார் திருவள்ளுவர். ஒன்றன் அழிவுக்கு இவற்றுள் 'ஒரு கெடுதலைச்' செய்தாலே போதும்! இரண்டு கெடுதலும் நிகழ்ந்தால் எப்படித் தப்பும்?

சித்திவளாகம்

வள்ளலார் நிறுவிய மற்றொரு நிறுவனம் மேட்டுக் குப்பத்திலுள்ள சித்திவளாகத் திருமாளிகையாம்.

சங்கம் சாலை சபை என்னும் சன்மார்க்க நிறுவனம் மூன்றனையும் கண்டோம். இனிச் சித்திவளாகம் பற்றிக் காண்போம்.

அடிகளார் தனிமையை - தனிமை அமைதியை நாடினார். அதற்குத் தருமச் சாலையின் உறையும் ஏற்புடையதாக அமைய வில்லை.ஆதலின், சித்திவளாகத்தை அமைத்தார். அங்கிருந்து கொண்டேதான் சபையையும் எழுப்பினார்.

ஏறா நிலைக்கு ஏறி நிற்றல்- வீடுபேற்றினும் விழுமிய தாம் நிலையில் நிற்றல் சித்தி எனப்படும். அந்நிலையில் அடிகளார் அமைத்ததும் திருவுருக் கரந்து நிற்க வாய்த்ததும் ஆகியவை சித்திவளாகச் சிறப்பை, அதன் பெயரே விளக்கும். அடிகளாரின் நுண்ணிய நோக்கும் நூலறிதேர்ச்சியும் இப்பெயரீட்டில் விளங்கிக் கிடத்தல் அறிதோறும் இன்பம் பயப்பதாம்.

இதனை வள்ளலார் வாக்கால் ஊரனடிகளார் தெளிவுறுத்துகிறார்: