உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரையாசிரியன் முன்னுரை

சிவஞான போதம்' மெய்கண்டார் அருளிய மெய்யுணர்வு நூல். அதன் மெய்யுணர்வுக் கொள்கைகள் எச்சமயத்தாரும் இனிதின் ஏற்கத் தக்க பொது நோக்குடையவை. அவற்றை ஓரளவே தமிழ்ப் பயிற்சியுடையாரும், சமயப் பயிற்சியில் புதுவாகத் தலைப்படுவாரும் எளிமையாக அறிதல் வேண்டும். இதற்குத் தக, 'உளிய - தெளிய - உரை' யொன்று வேண்டும் என்னும் வேட்கை என்னுள் பல்கால் எழுந்தது. அவ்வேட்கையை நிறைவேற்றும் வாய்ப்பைத் திருவருள் ஒரு வகையால் கூட்டுவித்தது.

மதுரைத் திருநகர் சார்ந்த பாண்டியன் நகரில் அருள்மிகு கலியாண விநாயகர் திருக்கோயில் உள்ளது. அக்கோயிலில் சிவஞான போதத்தைப் பற்றிப் பதினைந்து பொழிவுகள் செய்தற்கு இசைந்து நடாத்தினேன். முதற் பொழிவு இறையருள்; இரண்டாம் பொழிவு மெய்ப்பொருள்; மூன்றாம் பொழிவு மெய்கண்டார்; எஞ்சிய பன்னிரு பொழிவுகளும் சிவஞான போதப் பன்னிரு நூற்பாக்களுக்கும் உரை விளக்கம் புரிதல் என்பதே. இதுவே பொழிவுத் திட்டமாம்.

போதப் பொழிவு கேள்வியரைக் கவர்ந்தது போலும்! இளையரும், முதியரும், ஆடவரும் பெண்டிருமாக ஆர்வத்தால் வந்து கேட்க வைத்தது. நாடித் தேடிவந்து ஒரு பொழிவைக் கூடத் தவறாமல் நயந்து கேட்குமாறும் வைத்தது. ஆதலால், அப் பொழிவுப் போக்கிலேயே போதத்திற்கு எளியதும் தெளி வானதுமாய் உரையொன்று எழுதிவிடுதல் தகவாம் என உட்கொண்டேன்! என் பொழிவையும் பொழிவுப் பொருளையும் அதன் பயனீட்டையும் நன்கனம் அறிந்தனர் கழக ஆட்சியாளர் திருமிகு இரா.முத்துக்குமாரசாமி எம். ஏ., பி. லிப்., அவர்கள். அதற்கு எழுத்துருத் தந்துவிடின் நூலுருப்படுத்தலாம் என நுவன்றனர். அந்நுவற்சிப் பயனே சிவஞான போதத் தெளிவுரை விளக்கமாக இப்போது வெளிப்படுகின்றதாம். ஆதலின், பாண்டியன் நகர் பிள்ளையார் திருக்கோயில் ஆட்சிக் குழுவினர்க்கும், ஆர்வத்தால் பொழிவைப் கேட்டு மகிழ்ந்து