உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையடக்கம்

மங்கலவாழ்த்துக் கூறிய ஆசிரியர் அடுத்து அவையடக்கம் கூறினார். அவையடக்கம் கூறுவது பழைமையான வழிமுறையே ஆசிரியர் தொல்காப்பியர் அதனை 'அவையடக்கியல்' என்பார்.

'திறனற்றவற்றைக் கூறினாலும் அதனை ஆய்ந்து திறமானதாக அமைத்துக்கொண்டு உதவுக என்று நூலாசிரியன் எல்லார்க்கும் பொதுவாக வேண்டிக்கொள்வது அவையடக்கி யல்" என்பார் தொல்காப்பியர் (1370).

அவையடக்கின் அருமை பெருமையை அறிந்து, குறைவற்ற நூல், தாம் யாப்பது மெய்யேயாயினும், பழமரபு போற்றி வழிகாட்டுதல் நூலோர் நெறி என்பதால், அதனைத் தாமும் செய்வாராய்க் கூறினார். கூறும் கூற்றிலேயே, தாம் யாக்கப் புகுந்த செம்பொருள் சிறப்பின் ஊடகத்தைப் பற்றிக்கொண்டு உரைத்தருளினார்.

"தம்மை யுணர்ந்து தமையுடைய தன்உணர்வார்

எம்மை யுடைமை எமையிகழார் - தம்மை

-

உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்"

"தம்மை உணர்ந்துகொண்டு தம்மை ஆளுடைய தலைவனை உணர்ந்தவர்கள் எம்மை உடைமையாக உடையவராம். ஆகலின், அவர்கள் எம்மை இகழார். ஆனால், தம்மை உணராதவரோ தம்மை ஆளுடைய தலைவனையும் உணராதவரே! அவர்கள் தமக்குள் ஒன்றுபட்டு ஒன்றைக் கூறமாட்டார். அத்தகையர் புறம்பான சொல்லையாம் ஒரு பொருளாகக் கொள்ள மாட்டோம்" என்பது இதன் பொருளாம்.

தம்மை உணர்ந்தவரே தலைவனை உணர்வர் என்றும், அவரைத் தலைவராகத் தாம் கொண்டிருத்தலால், தம்மை உடைமையாகக் கொண்ட அவர்கள் அன்பாற் பாராட்டுவரே யன்றி இகழமாட்டார் என்றும் அவரைப் போற்றி அவை யடக்கம் உரைத்தார்.