உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

பொறுப்போ - தலைமையோ - கண்காணிப்போ மேலாண்மையோ தந்துவிடுதல் ஆகாது. அவ்வாறு தந்து விடின், அதுவே அறிவறியாத் தீமைகளுக் கெல்லாம் இடமாகிவிடும் என்றும் திருவள்ளுவர் எச்சரிக்கிறார். இவ்வெச்சரிப்பைப் போற்றாமையால் பற்று, பாசம் எனக் கொண்டு எத்தனை எத்தனை பெரிய

நிறுவனங்களும், தொழிலகங்களும், அமைப்புகளும், கட்சிகளும் பாழ்பட்டுள்ளன என்றும் பாழ்பட்டு வருகின்றன என்றும் அறிவார் இதனை எளிமையாகக் கொள்ளமாட்டார். தான் வளர்த்த கள்ளியே எனினும் அழிக்க விரும்பாமையைச் சங்கப் பாடல் தெரிவிக்கும். அவ்வாறாகவும் அரும்பாடுபட்டுக் காலம் காலமாகப் பலரும் வளர்த்த ஒன்றைச் சுருங்கிய பற்று பாசங்களால் கெடுத்தல் இரங்கத் தக்கதாம்.

“காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும்" (507)

-

காதன்மை பற்றுதல் தன்மை; கந்து -காரணம்.

இன்னுமோர் எச்சரிக்கையையும் தருகிறார். அது நம்பக் கூடியவர் தாமா என்று ஆராயாமல் ஒருவரை நம்பிவிடுவதும், நம்பத்தக்கவர் இவர் என்று ஆராய்ந்து தெளிந்தவர்மேல் நம்பிக்கை இல்லாமல் ஒழிவதும் ஆகிய வை இரண்டுமே நீங்காத் தீமை தருவனவாம் என்கிறார்.

"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்"

என்பது அது. பின்னே உண்டாகும் உறவுக்கேட்டை ஒழித்தற்குத் தரப்பட்ட முன்னெச்சரிக்கை ஈதாம். இவை தெரிந்து தெளிதல் சார்ந்த செய்திகள்.

இனித் ‘தெரிந்து வினையாடல்' செய்திகள் சிலவும் உறவு நிலைசிறக்க உதவுவனவாம்.

இச்செயலை இத்தன்மையால் இவன் நிறைவேற்றுவான் என்று தெளிவு செய்து அச்செயலை அவன் பொறுப்பில் விடுதல் வேண்டும் என்று கூறுகிறார்.

ஒருவன் பலரும் அறிந்த புகழாளனாகவும் பாராட்டும் இயல்பினனாகவும் இருக்கலாம். ஆயினும் அவன் அறிவறிந்த செயல் திறமையோ, குறைவற முடிக்கும் உறுதியோ உடையவனாக இருக்கமாட்டான். அவன் புகழ்நிலை கருதிப் பொறுப்பை ஒப்படைத்தல் ஆகாது என்றும் கூறுகிறார்.