16. உலகங் காணா உயர்வீரர் கதை
1
பள்ளிகள் தோறும் விளையாட்டுகள் நடை பெறுகின்றன. விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்குமாறு போட்டிகள் நடத்துகின்றனர். போட்டியில் தனித்தோர் போட்டியும் உண்டு, குழுவினர் போட்டியும் உண்டு. உயரத் தாண்டல், நீளத் தாண்டல், கழை தாவல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஓட்டப் பந்தயம் ஆகியவை தனிப்பட்டோர் போட்டி! உந்து பந்து, உதை பந்து, வளை பந்து, கூடைப் பந்து, பூப் பந்து, சடுகுடு ஆகியவை வ குழுவினர் போட்டி.
தனித்தோர் போட்டியிலும் வெற்றி, தோல்வி உண்டு. இரு சாராரும் வெல்வதோ, இருவரும் தோற்பதோ இல்லை. ஒருவர் வென்றால் ஒருவர் தோற்றே தீரவேண்டும். ஓரொரு வேளையில் இருவர் ஆட்ட நிலையும் இணையாக இருக்குமாயினும், மீண்டும் ஒரு வேளை ஆடச் செய்து வெற்றி தோல்வி காண்பதும், பதக்கங்களும் - பரிசுகளும் தருவதும் வழக்கு!
விளையாட்டுப் போட்டி போன்றதுதான் வீரப்போட்டி யும், தாக்குவோன் ஒருவன்; தடுத்து நிறுத்துவோனும் ஒருவன். தனித்தோர் போர் இது. தாக்குவோர் பலர்; தடுத்து நிற்போரும் பலர்; இது குழுப்போர், இனப்போர், நாட்டுப்போர்! மற்போர் து புரியவோ, கருவிப்போர் புரியவோ ஒருவர் விரும்பி நிற்கலாம். அவனை அவனுக்கு நிகரான வலியவன் எதிர்த்து நிற்கலாம்.
காட்டை அழிக்கவோ, மதிலை இடிக்கவோ, மண்ணைக் கவரவோ பலர் விரும்பி வரலாம். அவர்களுக்கு இணையான வீரர்கள் அவர்கள் ஆசையை அழிக்குமாறு முனையலாம். எனினும் இப்போட்டிகளிலும் வெல்வோர் ஒருவர், அல்லது ஒரு கூட்டத்தார். தோற்போரும் ஒருவர் அல்லது ஒரு கூட்டத்தார். இருவரும் - தாக்குவோரும் தடுப்போரும் - வெல்வதும் இல்லை; தோற்பதும் இல்லை.