உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

239

கரிகாலன் போருக்கு யானை மீது புறப்பட எண்ணினான். யானையின் தளையைக் கழற்றினர் யானைக் காவலர். அது பகைவரின் மனைவியர் தாலிகளைக் கழற்றி எறிவது உறுதி என்பதைக் காட்டிற்று. நிலமதிர நடந்த நடை பகைவர் குலம் அதிரும் என்பதைக் காட்டிற்று. ஆடி ஆசையும் “டாண் மணியொலி எதிர்த்தோர்க்குச் "சாவுமணி" அடிக்கப்படும் என்பதைக் காட்டிற்று. கருமேகத்தின் மேல் ஏறிக்கொண்டு களத்திற்கு வந்தான்.

ாண்”

களம் வந்த யானை சூறைக் காற்றுப்போல் சூழ்ந்திருந் தோரை அலைக்கழித்தது. யானையையும் அதன் செயலையும் கண்டு உயிர் மேல் துளியளவு பற்றுக்கொண்டவர்களும் நிற்க ஆற்றாது அஞ்சினர். ஓடி ஒளிந்தனர்; ஒதுங்கினர். “மலை நாடு கண்டறியா யானை வயல் நாட்டுக்கு எப்படிக் கிடைத்தது என்று திகைக்குமாறு களத்தைச் சிதைத்தது. சேரன் உள்ளம் வதும்பியது. யானையை வீழ்த்துமாறு உள்ளம் துடித்தது.

வேலினை எடுத்தான்; வீசி எறிந்தான். விரைந்து சென்ற வேல் - அம்மவோ அம்மவோ - யானையின் மருமத்தில் தைத்து மறுபக்கம் உருவியது. (மருமம் = காதின் அடி) மலைபோலும் யானையும் நிலை தடுமாறியது. ஒருபக்கக் களம் கலங்கியது! மற்றொரு பக்கக் களம் களித்து ஆரவாரித்தது. கரிகாலனுக்கு - அவன் ஏறிவந்த கரிக்கு காலனாக வந்த சேரன்மேல் ஏற்பட்ட கடுஞ்சினம் எத்தகையதாக இருந்திருக்கும்?

கண்கள் கனல் கக்க, முகம் சிவக்க, மயிர்க் கூச்செறியத் துடிதுடித்துப் போனான். “என் யானையின் மருமத்தைத் துளைத்த சேரன் மார்பினை என் வேலால் துளைப்பேன் என்றான்; வலியவன் வஞ்சினம் வாய்க்காமல் போகுமா? களத்தைச் சூறையாடினான். படைவீரர்கள் பட்டழிந்தனர்; யானைகள் அலறித் தொலைந்தன; குதிரைகள் வீழ்ந்தன; தேர்கள் சிதைந்தன; களம் பிணக்காடு ஆயிற்று.

சேரனை நோக்கிச் செம்மாந்து சென்றான் கரிகாலன். அவன் கண்களில் கப்பிக்கொண்டிருந்த கனல் வேலிலும் பாய்ந்தது போல் பொலிவுடன் விளங்கியது. வீசினான் - வேலை- அம்மவோ! குறி தவறவில்லை. சேரன் மார்பிலே பட்டது. முதுகு வழி வெளியேறியது. வஞ்சினத்தை முடித்து வைத்தது வலியவேல்.