புறநானூற்றுக் கதைகள்
11
கூட்டு ஒப்பந்தம் உரையளவில் இருக்கும் போதே அதனை ஒற்றர் வழியாக அறிந்தான் ஓரி. “காரி பெரு வீரன்; அவனோடும் சேரனும் சேர்ந்துகொண்டான்; ஒருங்கே இருவரும் களத்திற்கு வர நேரின் என்ன நிகழுமோ?" என்று எண்ணினான். அவர்கள் தன்னைத் தாக்கும் வரைக்கும் காத்திருக்கக்கூடாது என்று கருதி, உடனே முள்ளூர் மீது படை நடத்திச் சென்றான்.
ஓரியின் படையும், காரியின் படையும் களத்திலே சந்தித்தன. கடுமையாகப் போர் நடந்து கொண்டிருந்தது.சேரன் வரு முன்னமே தன்னை ஓரி ஒழித்து விடுவானோ என்று அஞ்சினான் காரி! இருபக்கப் படைகளும் கணக்கின்றி வீழ்ந்தன. போரை விரைவில் முடிக்கக் கருதிய வேந்தர் இருவரும் தங்கள் தங்கள் குதிரை மீது ஏறிக்கொண்டு போரை ஊக்கினர். ஓரி குதிரை ‘ஓரி' என்னும் பெயருடையது; குதிரைகளும் தம் பெயருக்கு ஏற்பவே, ஓரி போலவும், காரிபோலவும் சினம் செருக்கிப் போரிட்டன. இந்நிலைமையில் சேரன் உதவியும் காரிக்குக் கிடைத்தது. அந்தோ! முன்னோங்கிய ஓரியின் படை பின் வாங்கி ஓட்டம் பிடித்தது; ஓரி மட்டும் அஞ்சாது முன்னின்றான்; அவன் வாள் பரணி பாடியது; எவ்வளவு நேரம்தான் தனி ஒருவனாய் நின்று தாக்க முடியும். பாடுவோரும் ஆடுவோரும், கலங்கிக் கண்ணீர் வடிக்க ஓரி போர்க்களத்தே மாண்டான்! புகழால் நிலை பெற்றான்.
இன்றும் கொல்லி மலை வட்டாரத்தே ஓரியின் பெயரால் ஆண்டுதோறும் விழா ஒன்று நடைபெற்று வருகின்றது. ஆனால் ஓரி வேட்டை என்னும் உயர் பெயர் நரிவேட்டையாக மாறித் தாழ்வுற்றுப் பாழ்பட்டு விட்டது.
ஓரி கொல்லிமலைக் காவலன் அல்லவா! பெருவில் வீரனும் ஆவன் அல்லவா! ஆதலால் ஓரி வேட்டை என்னும் விழா எடுப்பது சால்புடையதே! அவ்வாறே கொல்லி வட்டாரப் பெருமக்கள் விழாவும் எடுத்தனர். பிற் காலத்தே ஓரியை மக்கள் மறந்தனர்; அறவே மறந்தனர். ஓரி என்னும் சொல்லுக்கு ‘நரி' என்னும் பொருள் இருத்தலை இலக்கியத்தில் அறிந்தனர். ஆதலால் ஓரி இருந்த இடத்திலே நரியை நிறுத்தி வேட்டையாடி விட்டனர். அந்தோ! ஓரி வேட்டை, நரி வேட்டையாகும் அளவுக்குக் கெட்டு விட்டது தமிழகம்! பழைய மாண்பினை நினைவுகூறும் அளவுக்காவது இன்று ஏற்பட்டுள்ள நல்லுணர்ச்சிக்கு வாழ்த்து!