8. யான்கண்டனையர்
மெய்ப்பொருள் கொள்கைகளுள் ஒன்று “சார்ந்ததன்
வண்ணமாதல்” என்பது.
நெருப்பினை நெருங்கினால் வெப்பத் தாக்குதல்
நீரினை நெருங்கினால் தண்மைத் தழுவல்.
பற்றி எரியும் வைக்கோற் போரின் பக்கத்தில் இருக்கும் போதும், பொங்கி வழிந்து பூரிக்கும் அருவிச்சூழலில் இருக்கும் போதும் வேறுபாடு இல்லையா?
பட்டுடையுடுத்துப் பளிச்செனத் திரியும் நிலைக்கும், பழங் கந்தை யுடுத்துப் பசித்துத் திரியும் நிலைக்கும் உளப்பாட்டில் எவ்வளவு வேற்றுமை?
இவையெல்லாம் உடலைத் தாக்கி உள்ளத்தைத் தாக்கு பவை. இனி உள்ளத்தைத் தாக்கி உடலைத் தாக்குபவையும் உண்டு. அவற்றையே திருவள்ளுவர் 'சிற்றினம் சேராமை என்றும் ‘பெரியோரைத் துணைக் கோடல்' என்றும் கூறினார். "நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று”
என வரவேற்று,
“தீயாரைக் காண்பதுவும் தீதே - திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது”
என ஒதுக்கி யுரைக்கும் இத்தகு பாடல்களும் அறிவுரை களும் நல்லதும் அல்லதுமாம் இனச்சார்பு சுட்டி நலப்பாடு செய்வன ஆகும்.