உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

இளங்குமரனார் தமிழ்வளம் 5

என்னினும் என்மேல் பேரன்புக் காதல் செலுத்தும், என் துயர்க்கு என்னினும் துடித்து நிற்கும் அன்புப் பிழம்பு, என் தேவையை அறிந்து என்னினும் முந்து நின்று உதவும் அந்த அருட்கனி, எனக்காகவே தன்னை முற்றாகத் தந்து விட்ட அந்தப் பிறவி ஈகி என் உடலாய், உணர்வாய், உயிராய் விளங்குகின்றாள். அவள் இருக்கிறாள். எனக்கு இல்லாக் குறை, பொல்லாக் குறை என எதுவுமே இல்லை!

என் காவல் தெய்வம் அவள். அவள் தன்னை மட்டுமோ காக்கிறாள்? என்னையும் காக்கிறாள். தன் குழந்தைபோல என்னைக் காக்கிறாள். கண்ணைக் காக்கும் கண்ணிமை போலக் காக்கிறாள்; முதியரைப் பேணிக் காக்கும் இளையரைப் போலக் காக்கிறாள்; இவற்றிக்கு மேலே உயிர்க் காதலனைக் காக்கும் உயிர்க் காதலியாகக் காக்கிறாள். தன்புகழோடு என்புகழையும், பிறந்த குடிப் புகழோடு புகுந்த குடிப்புகழையும் ஒருங்கே காக்கிறாள். இத்தகைய காவல் கடமையளைப் பெற்றபேறே யான் முதுமையை வெற்றி கொண்ட பேறு! தலையாய பேறு.

மனைவி மனம் போல வாய்த்தாலும், மக்களும் அப்படி வாய்க்க வேண்டுமே! மண்ணின் வளத்தை வித்தின் முளை காட்டும். பெண்ணின் வளத்தை அவள் வயிற்று மக்கள் காட்டு வர் என்பதை மெய்யாக்கும் மக்கள் எனக்கு வாய்த்துளர்.

அறிவால் நிரம்புவர் மக்கள்; அதே பொழுதில் செருக் காலும் நிரம்புவர். என் மக்களோ தாயின் பண்பு நலங்களெல் லாம் ஒருங்கே கொண்டு திகழ்கின்றனர். அவளைப் பெற்ற பேற்றைப் பெருமிதமாக நினைப்பதா? அவள் பெற்றுத்தந்த பேறுகளைப் பெருமிதமாக நினைப்பதா? இல்லை; ஒன்றில் ஒன்று விஞ்சி நிற்கும் பேற்றைப் பெருமிதமாக நினைப்பதா? மனைவியைப் போலவே மக்களும் மனை நிரம்பியவராய் மனம் நிரம்பியவராய் திகழ்கின்றனர். இது இரண்டாம் காரணம்.

எனக்கு ஏவலர் உளர். அவர்க்கு ஏவலர் என்னும் பெயர் தரலும் ஆகாது. ஏனெனில் ஏவிச் செய்பவர் அல்லரோ ஏவலர்? அவரை நான் என்று ஏவினேன்? அவரும் தாம் எந்த ஏவலை நோக்கிச் செய்தனர்.

குறிப்புணர்தல் அரிய திறம்! குறிப்புணர்ந்து உள்ளம் கொள்ளக் கடமை புரிதல் அதனினும் அரிய திறம்! அத்திறம் உடையவரை நம் உறுப்புகளுள் எதனைக் கொடுத்தேனும் கொள்ளுதற்கு உரியர். ஆனால், உறுப்பைக்கொடாமலே தம்