உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

மக்களால் காலந்தோறும் மதிக்கப்படும் புலவர் பெரு மக்கள் இருந்துளர். இச்சுவடியில் சொல்லப்படும் பெரும் புலவர்களுள் இருவர் பெருந்தலை, பெருங்குன்றூர் என்னும் ஊர்களில் பிறந்தவர்கள். ஊர்க்கு அமைந்த பெருமையால் புலவர்கள் பெருமை பெற்றதோடு தம் அறிவு ஆற்றல் அறச் செயல் ஆகியவற்றாலும் பெருமையாக இருந்தனர் என்பது இவ்வரலாற்றால் புலப்படும்.

சித்திரனார் என்னும் பெயருடைய வேறு புலவரும் இருந் தமையால் அவரில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பெருஞ்சித்திரனார் எனப் பெயர் சூட்டி வழங்கினர்.

இவ்வகையால் பழங்காலத்தில் ‘பெரும்' என்னும் அடை மொழியுடன் சான்றோர் பெருமக்களால் வழங்கப்பட்ட மூவர் வரலாறும் அவர்கள் பாடல்களைக் கொண்டே இவண் வரையப் பட்டுளது.

பழங்காலப் புலவர்கள் தம் கல்வியால் பிறர் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தாம் முன்னின்று தீர்க்கும் பெரும் பணி செய்தமையும், மன்னராக இருப்பினும் மாறுபட நடப்பவர் எனினும் முன்னின்று திருத்த முந்துவர் என்பதும், மானம் குன்றும் வாழ்வைக் கொள்ளார் என்பதும் இவ்வரலாறுகளால் அறியக் கூடும். இதனைக் கற்பவர் நெஞ்சில் பதியச் செய்யும் வகையில் பதிப்பிக்கும் பதிப்புத் தோன்றல் மாணவர் பதிப்பக உரிமையாளர் இ. வளர்மதியார் நன்றிக்குரியர்.

இன்ப அன்புடன். இரா. இளங்குமரன்