உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

இளங்குமரனார் தமிழ்வளம்

5

வனப்பையும் கண்டு கண்டு சித்திரனார் களி கூர்ந்தார்; இயற்கைத் தமிழை இளமை வயது தொடங்கியே சுவைத்து இன்பங் கொண்டார்; பெற்றோரின் கண்டிப்போ, தண்டிப்போ இல்லாது உரிமை வாழ்வு வாழ்ந்தார்.

வாழ்க்கைக்கு இன்றியமையாப் பொருள்

பெருஞ்சித்திரனார் பிறந்து வளர்ந்த காலம், இயற்கைச் சூழலிலே ஆசிரியர்கள் தங்கி மாணவர்களைத் தம்மோடு இருக்கச் செய்து கல்வி கற்றுத் தந்த காலம். அக்கால இயல்புக்கு ஏற்பப் பெருஞ்சித்திரனார் தக்கவாறு கல்வி பெற்றார். உலகியல் அறிவும் கலை பயில் நயமும் சிறப்பாகக் கைவரப் பெற்றார். வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளைக் கொண்டே வனப்பு மிக்க கவிதைகள் தீட்டும் வல்லமை பெற்றார். உரிமையுடன் வாழ்ந்து திரிந்த கலைஞராகிய அவர் வாழ்க்கைக்குரிய தொழிலொன்றை யும் தேர்ந்து எடுத்துக் கொள்ளவில்லை. வயிற்றுப் பாட்டுக்காக வாய்த்த தொழிலொன்று வேண்டுமே என்பதை மறந்தார். தமிழ்ச்சுவை அருந்துவதிலே தணியாத வேட்கை கொண்டார்.

"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” யல்லவா? எவ்வளவு கல்வி இருந்தாலும், கலையிருந்தாலும் வயிற்றுப் பாட்டுக்குத் தொழிலொன்று வேண்டுமே! இல்லையேல், கலையை மதித்துக் காக்கும் பெருங்குணம் படைத்த கலைச் செல்வர்களாவது இருந்து காக்க வேண்டுமே! அவ்வாறிருந்தால் தானே வாழ்க்கைச் சக்கரம் சுழல முடியும்!

மனை வாழ்க்கை

பெருஞ்சித்திரனார் தக்க வயதில் திருமணம் செய்து கொண்டார்! மனைவியரோ நல்லவர்! மிகமிக நல்லவர்! வறுமை வந்த காலத்தில் தான் வாய்த்த மனைவியின் உண்மை இயல் பினை உணரலாம் என்பர். அதற்கேற்பச் சித்திரனாரின் மனைவியோ செம்மையான குணங்கள் உடையவர்! அன்றியும் வறுமையில் செம்மை காத்து, அமைந்த வாழ்க்கை நடத்தும் அருமைப்பாடு உடையவர். கருத்து ஒத்த அவர்கள் வாழ்க்கை யிலே மக்கட் செல்வமும் பெருகிற்று. ஆனால் பொருட் செல்வம் இன்மை அவர்தம் வாழ்வை அரித்தது.

சித்திரனார் வறுமையைப் பொறுத்துக் கொண்டார்! வாய்த்த மனைவியும் பொறுத்துக் கொண்டார்! சிறுவர்கள் பொறுத்துக் கொள்வரோ? அன்றியும் சித்திரனாரைப் பத்து