உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

5 இளங்குமரனார் தமிழ்வளம்

வாங்கிக் கொள்ளுமாறு புலவர் விரும்பவில்லை. செல்வர்களின் நகைப்புக் கிடமான பண்புகளை எண்ணி எண்ணி நெஞ்சம் உருகினார். பொருட் செல்வம் மட்டுமே உடையவர்களின் புன்மைக் குணம் சித்திரனாரைப் பெரிதும் புண்படுத்திற்று. அதனால் தம் நெஞ்சிற்குக் கூறுவார் போலக் தொடங்கினார்.

புலியும் எலியும்

கூறத்

"நீடுவாழ்க என்று யான் வாழ்த்திவரக் கோடைக்கு அமைந்த கொழுநிழல் போன்றவனான வெளிமான் இறந்து பட்டான். சான்றோரது கேள்விப் பயன்மிக்க சால்புடையவன் மாண்டான். பசித்து வந்தவன் சோற்றுப் பானையை ஆவலோடு பார்க்க அதிலிருந்து தீக் கிளம்பியது போல நாடிவந்தோர் ஆசையைப் பழுதுபடச் செய்த கூற்றம் கொடிதே காண்! உரிமை மகளிர் தம் மார்பில் அறைந்து கொண்டு விழுந்து அழுது வாழைப்பூப் போல வளையல் உதிர்க்க இரவலர் இரங்கக் கள்ளி மண்டிய பாழ்பட்ட காட்டுக்கு வீரன் போய்விட்டான். அவனைக் கொன்ற கூற்றம் நோயின்றி வாழ்வதாக! யானையின் வேட்டைக்காக வந்த புலி, அவ் யானை வேட்டை தப்பியது கருதி எலி வேட்டையாடாது அன்றே! துள்ளிவரும் வெள்ளம் போன்று போய் வேறிடத்தே விரும்பிய பரிசைப் பெறுவேன். நெஞ்சமே எழுந்திரு! தெளிவு கொள்!” என்றார். மேலும் கூறினார். கனியிருப்பக் காய்கவர்தல்

"அருகிலே வரக்கண்டும் ஆவல் பெருகப் பார்க்காது, அறிந்தும் அறியாதவர் போலாக நின்று, மனத்தே மகிழ்ச்சி குறைய, முகத்தே மாறுபாடு தோன்ற அளிக்கும் பரிசும் பரிசோ? அளவில் எவ்வளவு ஆயினும் என்ன? ஊக்கம் உ உடையவர் அதைப் பொருளாகக் கொள்வாரோ?

‘வருக' என வரவேற்றுச் செய்யும் சிறப்பெலாம் செய்து தரும் பொருளை ஏற்பதே முறை! வையமோ பெரிது; வரிசை யறிந்து கொடுக்கும் வள்ளல்களோ பலர்; சிங்கம் போன்று செம்மாந்து செல்லும் உள்ளமே, உடைந்து போகாதே! பலரும் அறியவும் நமக்கு இரக்கம் காட்டாதவனிடத்தே நிற்பது ஒழிக! கனியிருப்பக் காய் தேடி வருந்துவோர் உலகில் உளரோ? நெஞ்சமே எழுக! செல்வோம் யாம்!” என்று கூறி, அரண் மனையை விட்டு வெளியேறினார் புலவர் சித்திரனார்.