பெரும் புலவர் மூவர்
353
இ இவ்வாறெல்லாம் நல்ல பல வள்ளல்களை அடுத்திருந்து வாழ்ந்தாலுங்கூடப் பெருங்குணம் படைத்த மூலங்கிழாரால் பெற்றதைப் போற்றிவைத்து வாழ முடியவில்லை. வந்த பொருளையெல்லாம் வாரி வாரி வழங்கிப் பிறர் வறுமையைப் போக்குவதிலே அவருள்ளம் நிலைத்து நின்றதனால் வறுமையிலே வாழ வேண்டியது ஏற்பட்டது. ஆனால் வறுமை கருதித் தகுதி யில்லாதார் தரும் பொருளை ஏற்றுக் கொள்ளும் உள்ளம் அவருக்கு இருந்தது இல்லை.
புலவர்களைத் தக்க முறையில் வரவேற்றுப் போற்றாத வேந்தர்களைப் புன்மையாகக் கருதினார் ஒரு சமயம் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைக் காணுமாறு சென்றார். அவன் புலவரைக் கண்டு அளவளாவினாலுங்கூடப் பரிசு தந்து அனுப்பும் நோக்கம் இல்லாதவனாய் நாள்களைக் கழித்து வந்தான்.
"கூறாமை நோக்கிக் குறிப்பறியும்” திறம் உடைய புலவர் மூலங்கிழார் அரசனது உள்ளக் கருத்தை உணர்ந்து அங்குத் தாழ்த்திருக்கக் கருதாதவராய் வெளியேற எண்ணினார். அரச னுக்குத் தக்கவாறு புத்தி புகட்டாமலும் வெளியேற மனம் வரவில்லை.
அதனால் பாண்டி வேந்தனைப் பார்த்து “அரசே! தம்மால் கொடுக்க இயலும் பொருளை இயலும் என்று சொல்லிக் கொடுத்தலும் எவருக்கும் தம்மால் கொடுக்க இயலாத பொருளை ள இல்லை என்று சொல்லி மறுத்தலும் ஆகிய இரண்டும் முயற்சியுடையார் செயலாம். தமக்கு இயலாததனை இயலும் என்றலும், இயலும் பொருளை இல்லை என்று மறுத்தலுமாகிய இரண்டும் இரவலரை ஏமாற்றவும் புகழைக் கெடுக்கவும் உரிய வழியாம். இப்பொழுது நீ எமக்குச் செய்த செயலும் அத்தன்மையதே! இச் செயலை இதுகாறும் எம் புலவர் குடியினர் காணார்! அதனை யாம் கண்டோம்! இத்தீய நிகழ்ச்சியால் நின் புதல்வர்கள் தீதின்றி வாழ்வாராக; உன் வாழ்நாள் சிறப்பதாக. யான் வெயிலென்று கருதிச் செல்வதை வெறுக்காது பனியென்று கருதிச் சோம்பிக்கிடவாது. கொடிய வறுமையால் வெயிலையும் மழையையும் விருப்புடன் ஏற்கும் எமது மனையில் நாணும் கற்பும் அல்லது வேறு பொருளின்றி வாழும் மனைவியை நினைத்துப் போகின்றேன்! நின் வாழ்வு மிகுவதாக!” என்று வாழ்த்தி விட்டுப் புறப்பட்டார் புலவர்.