396
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
என்பதாம். இதனை “நறைப்பவர் நறுங்காழ் ஆரஞ் சுற்றுவன” என்று கூறினார். இங்குக் கூறியனவற்றால் பெருங்குன்றூர் கிழாரது காட்சிச் சிறப்பும், கருத்துச் செறிவும் ஒருவாறு புலனாம். விரிவு அவர் தம் பாடலில் காணற்குரியது.
இதுகாறும் கூறியவற்றால் பெருங்குன்றூர் கிழாரது வரலாறு ஒருவாறு புலனாம். இவர் உழுதுண்ணும் உயர் குடியிலே பிறந்தார். அக்குடியின் இயற்கைப் பண்புக்கேற்ப வாழ் நாளெல்லாம் பிறருக்குதவி புரிந்து வாழுபவராகவே இருந்தார். தம் வறுமையைப் போக்க நினைக்கும் நேரத்தே உற்றார் ஊரார் வறுமையையும் போக்க நினைத்தார். மக்களொடு துவன்றி மனையறங்காத்தலில் சிறந்து விளங்கிய அவர் ஏனையோரும் அவ்வாறு இன்புற்று வாழவேண்டும் என்னும் பெருநோக்கு உடையவரானார். அதற்காகப் பேகனிடத்துச் சென்றும், இளஞ் சேரல் இரும்பொறையினிடத்துச் சென்றும் பயன் கருதாது பலவாறாய் எடுத்துரைத்துத் தம் வழிக்குக் கொண்டு வந்தார். "எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியாத” அவர்தம் மான வாழ்வும், இல்லற மாண்பும், பிறர்க்கென வாழும் பெற்றியும் உலகைக் காக்குமாக! உயர் வினைத் தருமாக!