402
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
✡
அடைந்தார். பாண்டியன் அறிவுடைநம்பி அரசியற் சுற்றம் சூழ்ந்திருக்கச் சிந்தனையில் ஈடுபட்டு இருந்தான். நாட்டின் வருவாய் நிலை குறித்த சிந்தனைக்கு இடையே - சிக்கலான பொருளாதாரச் சிந்தனைக் கிடையே - எவரும் புகமுடியுமா? அனுமதி கிட்டுமா?' அரசரும், அவையினரும் ஏற்பாரா?
ஆட்சிச் சக்கரத்தை உருட்டிச் செல்லும் உயர் வட்டாரத் தினர் அன்றி எவரும் புகமுடியாத அவைக்கண் புகுந்தார் பிசிராந்தையார். காட்சிக்கு எளியனாம் பாண்டியன் அறிவுடை நம்பி, கவிக் குலக் கோமகனைக் கனிந்த சொற்களால் வரவேற்று இருக்கச் செய்தான்; இன்னுரை பல கூறினான். பின்னர், அவை, தான் மேற்கொண்ட பணியை ஆராயத் தொடங்கியது. புலவர் பெருமகனார்க்குத் தேடி வந்த வாய்ப்பு எளிதில் கிட்டியது; உள்ளத்தில் எழுந்த உணர்வை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தார்.
புலவர் பொருமல்
“நாட்டின் வருவாய் போதாது' என்றும், 'குடிகளிடம் வரிகளைக் கூட்டி வாங்குதல் வேண்டும்' என்றும் அதிகாரிகள் அனைவரும் ஒன்றுபோல் உரைத்தனர். அவர்கள் உரையையும் ஆராயாமல், மக்கள் உண்மை நிலைமையையும் அறியாமல் 'நல்லபடி நடக்கும்' என்னும் கருத்தால் அமைதியாக இருந்தான் பாண்டியன். இவ்வளவு வ்வளவு போதும் அல்லவா அதிகாரிகள் வேட்டைக்கு! ஏதேதோ வரிகளை அடுக்கினர். புலவர் பிசிராந்தையார் பொருமினார்; புண்பட்டார். இடித்துரைத்து இயல்நெறி காட்டுதற்கு உரிய இடம் இதுவே எனத் தெளிந்தார். திட்டமான கருத்துடைய அவர் தெளிவாகச் சொல்லமாட்டாரா? அருமையாக அவையோர் அஞ்ச, அறிவுடை நம்பி உண்மை நிலை அறிய அன்னைத் தமிழ் மொழியில் பேசினார்.
புலமை உரை
‘வற்றா வயல்வள மிக்க பாண்டிய நாட்டின் வேந்தே! அறிவுடை நம்பி! இன்று இந்த அவையினிடை ஒன்று கூற விழைகின்றேன். அஃது உன்பொருட்டே ஆன ஒன்றன்று; உலகுக் கெல்லாம் உரித்தான பொதுமையான செய்தி. ஆனால் உன் முன்னிலையில் கூறுதற்குரிய நிலைமை இப்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது. கேள்! நீ அறிவுடை வேந்தன் ஆகலின் பைந் தமிழ்ப் பாவலன் ஆகலின் - என் மொழியை இனிது கேட்டு நடப்பாய் என்று நம்புகின்றேன்”
-