66
பண்டைத் தமிழ் மன்றங்கள்
459
ஊரிலோ, திருவிழா; மனைவிக்கோ, மகப்பேறு; பொழுது போகிறது; மழை கொட்டு கொட்டு என்று கொட்டும் போல் இருக்கிறது; காட்டாற்றுக் கடுவெள்ளத்தையும் காரி ருளின் கொடுவெள்ளத்தையும் கடந்துதான் ஊர்க்குச் செல்ல வேண்டும். ஆனால், கட்டில் பின்னுதலோ இன்னும் அரை குறையாக இருக்கிறது. அந்நிலையில் கட்டில் பின்னுவோன் ஊசி எவ்வளவு விரைவாக வேலை செய்யும்? அவ்வளவு விரைவுத் தாக்குதல் நடத்துகின்றது கிள்ளியின் கை!” மல்லனை வென்ற இம்மல்லனையும் ஓதி மங்கைதான் பாடுகிறாள்! இத் தகைய நிகழ்ச்சிகளை எண்ணும்போது,
“மங்கைய ராகப் பிறந்திடவே - நல்ல
மாதவம் செய்திட வேண்டும் அம்மா!”
என்று பாடும் கவிமணியுடன் நாமும் சேர்ந்து பாடாமல் இருக்க முடியாது!
மற்போரில் கிள்ளி வென்றான்; ஊரார் கண்கள் அவன் மேல் பாய்ந்தன; அரசன் மைந்தன் என்னும் உண்மையும் புலப்பட்டது. அரசன் கருத்திலே ஒரு திருப்பம் உண்டாகியது: மைந்தன் மனத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிரிந்தவர் கூடினர்; நாடும் நல்லோரும் மகிழ்ந்தனர்.
போரவைக்கிள்ளி
கிள்ளி மன்னவன் ஆனான்; “போர் போர்" என்றே திரிந்தான். கவிஞர் பேரவையும் கலைஞர் சீரவையும் அவனைக் கவர்ந்த அளவினும் போரவையே மிகுதியும் கவர்ந்தது. ஆகவே, அவன் இயல்புணர்ந்தவர்கள் ‘போரவைக் கோப்பெருநற்கிள்ளி' என்ற பெயர் சூட்டினர். அவனை வளர்த்து ஆளாக்கிய அன்னை தான், சிறு வீட்டுத் திண்ணையில் நிற்பவள். அவள் பெயர் காவற் பெண்டு.
பெற்ற தாய், நற்றாய் எனப்படுவதும் வளர்த்த தாய், செவிலித்தாய், காவல் பெண்டு எனப்படுவதும் வழக்கு. நாம் காணும் காவற்பெண்டாம் செவிலித் தாய், செவிலித்தாய் மட்டும் அல்லள்! ஒரு மைந்தனுக்கு நற்றாயும் ஆவள்.
தாயும் மகனும்
காவல் பெண்டு தன் மகனை இளமை தொட்டே வீரனாக வளர்த்தாள். அவனும் வீரனாக வளர்ந்தான். ஊட்டினால்