அறநிலை
7. நல்ல இல்லறத்தராக
தமிழர் கண்ட அறநிலை ஒன்றே; அதன், படி நிலைகள் தாம் இரண்டு.
இல்லறத்தின் வளர்ச்சியே துறவு. அஃதொரு, தனி அறம்
அன்று.
பள்ளிக் கல்வி கற்றார், மேனிலைக் கல்வி பெறுதல் போன்ற தொடர் நிலையுடையது. இல்லறத்தின் முதிர் நிலை யாம் துறவு நிலை.
துறவு
துறவு உலகப் பெரும் பார்வையது; உயிர்களின் ஓர் ஒத்த உரிமைப் பார்வையது. அவற்றின் பயிலகம், இல்லறம்
மக்களைப் பெறுதல்; மனையறங் காத்தல்; சிறந்தவை செய்தல்; அவற்றைப் பயிற்றல் என்பவை இல்லறம். அதனை மனையளவு கடந்து விரித்த தாக்கல் துறவு.
இல்வாழ்வுக்கு அடிப்படைப் பண்பு, அன்பு.
துறவு நிலைக்கு அடிப்படைப் பண்பு, அருள்.
"தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி” என்பது பழமொழி. அன்புத் தாய் பெற்ற அருட் குழந்தை, அத்தாயின் நிலையினும் பெருகிப் பன்மடங்காக விரிந்து பளிச்சிடும்.
வள்ளுவங் கொண்ட இந்நல்ல நெறியின் மூலம்-தொல் காப்பியம் ஆகும்.
“காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
என்பது அது (கற்பு. 51)