உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

தீ நட்பு

இளங்குமரனார் தமிழ்வளம் 6

பழைமை நம்புதற்கு உரியது; சூழ்நிலையால் நிலை மாறி இருப்பினும் உண்மையை உணரும்போது அதனைப் போற்றிக் காத்துக் கொள்ளவும் வல்லது. ஆனால், தன்னலமும் தன் வாழ்வுமே கருத்தாகக் கைந்நாடி பார்த்துக் கொண்டு வரும் தீய நட்பு எவ்வகையாலும் கொள்ளக் கூடாததாகும்.

நீர் வேட்கையுடையவர் அதனைக் காணுங்கால் எத்தகைய ஆர்வத்தோடு பார்ப்பரோ, ஆவலால் பருகுவரோ, அத்தகைய அன்பைக் காட்டுபவராக இருந்தாலும் நட்பின் பண்பினை அறியாதவர் உறவு வளர்வது இன்பம் தராது. அது குறைந்து குறைந்து இல்லாமல் ஒழிதலே இன்பமாகும்.

"பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலில் குன்றல் இனிது”

(811)

காசு பணம் உள்ளதா எனக் கருத்தாகக் கண்காணித்து நட்புக் கொள்வர்; அக்காசு பணம் இல்லா நிலை வருமெனத் தோன்றின் அதனைக் குறிப்பால் உணர்ந்து அதற்கு முன்னரே நீங்கி விடுவார்; இத்தகைய போலியர் நட்பைப் பெற்றால்தான் என்ன? பெறாமல் இழந்தால்தான் என்ன? (பெறுவதில் கூட, இழப்பதே நன்மை ஆகலாம்!)

“உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்?”

(812)

இவர் தொடர்பு இருந்தால் என்ன, என்ன பயன்களைப் பெறலாம்? என்ன என்ன வழிக்கு இவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பார்ப்பவர் நட்பு, நட்பாகாது. அவர் கொண்டுள்ள உடைமையைப் பெறுவதற்காக வந்து காலம் பார்த்திருக்கும் வஞ்சரையும், தட்டிப் பறித்துக் கொள்ளத் திட்டமிட்டிருக்கும் கள்வரையும் போன்றவர் அவர்.

“உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்

(813)

போர்க்குப் புறப்படுகிறான் ஒரு வீரன்; அவன் குதிரை வீரன்; தக்க குதிரை இதுவென உறுதியாக நம்பிக் கொண்டு அக்குதிரை மேலேறிச் செல்கிறான். குதிரையின் எழுச்சியும் விரைந்த செலவும் வீரனுக்கு இன்பம் ஊட்டின; அதனைக் கண்டவர்க்கும் அக்குதிரைகள் செலவிலே மயங்கியும், வியந்தும் நின்றனர்.