29. எப்படி வாழ்வது?
250 பவுண்டுக்குக் குறையாமல் 300 பவுண்டைத் தொடும் அளவில் உடல்; ஏந்தித் திரியும் கை; இரந்து கூறும் வாய்; இல்லையென்றால் ஏசும் நா; வாங்கிய பின் நன்றி பாராட்டாத நெஞ்சம் - இப்படி எத்தனை எத்தனை பேர்களைத் தெருக்களிலே காண்கிறோம்!
-
-
அதே பொழுதில்; ஒட்டிய வயிறு; ஒடுங்கிய கன்னம்; ளைத்த உடல்; ஏங்கிய மூச்சு; உலர்ந்த நா; மயங்கிய கண்; தள்ளாடும் கால்; தவித்த நடை; கடிய பாரம்; கொடிய வெயில் கரடு முரடான பாதை வயிற்றுத் தீப்பிணியை மானத்தோடு தணிக்க வேண்டி வண்டியிழுத்துத் திரியும் வறிய - ஆனால் மானம் பேணும் - ஒரு கூட்டத்தையும் தெருக்களிலே காண்கிறோம்! னொரு பக்கம்; இடிந்த வீடு மடிந்த உள்ளம்; கால் போகி, நார் கழன்ற கட்டிலாகக் காட்சியளிக்கும் கூரை; பழைய சாக்கு விரிப்பு; கந்தல் தலையணை; மூச்சு விடவும் முணக்கம்; எலும்புருக்கி நோயின் இளைப்பு; இடிந்த அடுப்பு; முரிந்து போன பானை; குப்பைக் கீரை; உப்பில்லா அவியல் - இவ்வளவும் காட்சிப் பொருளாய் இலங்க மானத்தைப் போற்றி - பிச்சைக் காரராகித் தெருவில் நடை பிணமாகத் திரிவதினும் உண்மைப் பிணம் ஆவது மேல் எனக் கருதி கதவு இல்லாக் குடிசைக்குள் கிடக்கும் வெம்பிய உள்ளங்கள்!
வாழ வழியிருந்தும் - தோட்டம் துரவு, நன்செய் புன்செய்; ஆடு மாடு; செல்வம் சீர்; பட்டம் பதவி; வாழ்வு வளம்; வெற்றி விருது; ஒட்டு உறவு; சுற்றம் சூழல் எல்லாம் இருந்தும் - உள்ள செல்வத்தைக் கணக்கெடுக்க ஒரு நூறு பேர் சேர்ந்தாலும் ஓராண்டு முயன்றாலும் இவ்வளவென்று தெளியமுடியாத சொத்து - இருந்தாலும் ஊர் ஊராக, நாடு நாடாக இருந்தாலும் மேலும் மேலும் வஞ்சத்தாலும், கள்ள வணிகத்தாலும் கையூட்டாலும் (இலஞ்சம்) பொருளைப் பெருக்கித் திரட்டித் திரியும் நெஞ்சமிலார்!