திருக்குறள் கட்டுரைகள்
125
தவத்தோர் என்றும் பெரும்பேறு பெற்றனர். இவர்கள் சிறப்பு, இவர்களால் உடுத்தப்பெற்ற காவியுடைக்கும் ஏறியது ஏன்? காந்தியடிகள் மேல் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்திய கருங்கல், வைரத்தினும் மதிக்கப்பெற்று, கலைக்காட்சியாகவும், திகழ்கின்றது அல்லவா!
உ
துறவி என்பதும், துறவி அல்லன் என்பதும் அவன் உள்ளுணர்வைப் பொறுத்த நிலை! என்றாலும் புறத் தோற்றங்களால் வெளிப்படுத்துக் காட்டும் தன்மை நாட்டில் ஏற்பட்டுவிட்டது. முக்கோல் கொண்டிருத்தலும், கமண்டலம் வைத்திருத்தலும் துறவிக்கு உரியன ஆயின. சடை வளர்த்தலும் மழுக்க வழித்தலும் வழக்கமாயின; மரவுரியுடுத்துதலும் காவி யுடுத்துதலும் நிலைத்துவிட்டன. இவை போல் பலப்பல புற கோலங்களும் தலையெடுத்தன. இவற்றைக் கொண்டிருப்பது ஒன்றே துறவு - தவம் - என்று கருதும் குழுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கிளைத்துவிட்டது. நெற்பயிர் தோன்றிய நாளிலேயே, புற்களையும் தோன்றியிருக்கக்கூடும் அல்லவா!
உள்ளத்தே தவத்தன்மை கொண்டிருப்பான் ஒருவன், புறத்தேயும் அதனைக்காட்டுமாறு ஏதேனும் கோலம் கொள்வன் ஆயின் குற்றமில்லை. ஆனால் அகத்தே தவவுணர்வு சிறிதும் இல்லாத ஒருவன் புறத்தே மட்டும் கோலம் காட்டித் திரிவது கூடா ஒழுக்கமாகும் - பிறரை ஏமாற்றித் திரியும் வஞ்சக ஒழுக்கமாகும். பசுத்தோல் போர்த்த புலி என்று உவமை காட்டிக் கூறலாம். இத்தகைய தவக் கோலம் கேடு செய்வதேயாம். ஆதலின் உள்ளத்தே இல்லாமல் புறத்தே சடைவளர்த்தலாலும், தாடி நீட்டலாலும், மழுக்க வழித்தலாலும் பயனில்லை. உள்ளத்தே தவவுணர்வு மிக்கோர் இவற்றைக் கொண்டால் என்ன? கொள்ளாவிடின்தான் என்ன? என்று வற்புறுத்திக் கூறவேண்டிய நிலைமை ஆன்றோர்களுக்கு ஏற்பட்டது. அதனால்,
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்”
என்றார் வள்ளுவப் பெருந்தகை.
தவத்தவர்களுக்கு நல்ல பாதுகாப்பு நாட்டில் இருந்தது. அவர்களைப் போற்றிக் காப்பது வீடாளும் தலைவன் தலைவியர் கடப்பாடாகக் கொள்ளப்பட்டு இருந்தது. அதேபோல், நாடாளும் வேந்தர், அமைச்சர் கடப்பாடாகவும் கொள்ளப்பட்டு இருந்தது.