திருக்குறள் கட்டுரைகள்
127
உடையேன்; தாங்கள் அருளிச் செய்தல் வேண்டும்" என்று துறவியாரை இருக்கச் செய்து முன்னிருந்து வேதப் பொருள் கேட்கத் தொடங்கினார். தம் கண்களை மூடிக்கொண்டு இறைவன் அருளை வியந்தார் மெய்ப் பொருளாளர். அவ்வேளையில் ஏடு அவிழ்ப்பவர்போல் அவிழ்ந்து மறைத்து வைத்திருந்த எடுத்தார் துறவி! முன் திட்ட மிட்டிருந்தபடியே மெய்ப்பொருள் நாயனாரைக் குத்தித் தீர்த்து விட்டான். எத்தனையோ வகைப் படைகளையும் கொண்டு பன்முறை முயன்றும் முடிக்க முடியாத செயலைத் தவவேடம் கொண்டு எளிதில் முடித்துக் கொண்டான் முத்தநாதன் என்னும் பேருடைய வேந்தனாம் அப்போலித் துறவி!
தவக் கோலத்தை மெய்ப் பொருளாக மதித்தார் மெய்ப் பொருளார்! அஃது அவருக்கு இயல்பு. ஆனால் முத்தநாதன் உலகத்தார்க்கு என்ன படிப்பினையை உண்டாக்கி விட்டான்? "தவக்கோலத்தைக் கொண்டவர்களையெல்லாம் நம்பாதீர்; என்னைப் போலும் போலித் தவத்தோரும் உளர்" என்பதை
உண்டாக்கி விட்டான்.
புறத்தோற்றம் ஒன்று கொண்டே முடிவு செய்ய முடியாத ஒன்று 'தவம்'. அதனை உள்ளுணர்வு கொண்டே முடிவு செய்யவேண்டும் என்பது வள்ளுவர் முதலாம் சான்றோர்கள் கோட்பாடு. இக்கோட்பாட்டை உலக நலங்கருதி அவர்கள் தெளிவாக உரைத்துள்ளனர்.
"தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்; மற்றை உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது; இவையே தவத்தின் மெய்யான வடிவம்" என்று உரைத் துள்ளனர்.
தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தல் தவமோ? அதனை அவர்கள் பொறுத்தால்தான் உலகுக்கு என்ன? பொறுக் காவிட்டால்தான் உலகுக்கு என்ன? எனச் சிலர் மனத்திலேனும் எண்ணம் உண்டாகலாம். ஆனால், தம்துயரைப் பொறுக் காமையால்தான் பலப்பல துயர்களும் உலகை—உயிர்களைச்- சூழ்கின்றன என்னும் கருத்துத் தோன்றின் உண்மை புலனாம்.
நோய் தம்மை வாட்டும்போது, வறுமை உறுத்தும்போது, பிறிதொன்று செய்த தீமைக்கு இரையாகும்போது, அமைந்து கிடந்தவரும் ஆரவாரித்து எழும்புவதையும், பொறுத்து இருந்த வரும் பொங்கி எழுவதையும் காண்கிறோம்; தம் துன்பத்திற்காக ஏற்படும் முனைப்பைக் கடந்து நிற்பது அல்லவா ஆண்மை!