உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

141

"கோட்டையும் படையும் கொண்டு குவலயம் காக்கும் ஒருவனும் உள்ளத்தைக் காப்பது அரிது” என்பர். பொதுவான மனம் பொறாது 'பூவுல கெல்லாம் என்னதே' என்றாகச் செய்வேன் எனப் போர்ப் பறை கொட்டிக் கிளம்பிய வீர வேந்தர்களாலும் உள்ளத்தைக் காக்க இயலவில்லையே! வீரன் சேரன் செங்குட்டுவனால், பாண்டியனும் சோழனும் பகர்ந்த "தோற்றோடியவர்களைச் சிறைபிடித்து வந்தது போலும் வீரம் யாம் கண்டது இல்லை” என்னும் சொல்லைத் தாங்கிக் கொள்ள முடிந்ததா? கொதித்து எழுந்து, வடநாட்டுப் போரை அடுத்துத் தென்னாட்டிலும் ஒரு 'களப்பலி' உண்டாக்கிவிட முனைய வில்லையா? பாண்டிய சோழ வேந்தர்களாலும், சேரன் செங்குட்டுவன் வெற்றித் திறங்கண்டு, வாழ்த்த முடிந்ததா? பழித்துரைக்கத் தானே முந்திக் கொண்டு நின்றனர்! இவர்கள் அனைவரும் “பொறுத்தல் சிறப்பாம்; மறுத்தல் அதனினும் சிறப்பாம்" என்னும் பொன்னெறியை அறியாதவர்களா?

1

இவர்கள் நிற்கட்டும்! வீர உணர்வாளர்கள்; மாற்றார் படைகளை மண்டியிட்டு மண் கவ்வ வைத்தலில் பழக்கப்பட்டு விட்டவர்கள்! களப்பலி யூட்டுதலில் கைவரப் பெற்றவர்கள்! உரன் என்னுந் தோட்டியால் ஓரைந்தும் காக்க வேண்டிய உரவோர்களும், ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கி வாழ வேண்டிய துறவிகளும் ஓரொரு வேளையில்-சிலர் பல வேளையில் கூட-உள்ளங் காக்கும் கடமையில் தவிர்ந்து, சாதாரண மாந்தர் நிலைமைக்கு இறங்கி விட்டதைக் காட்ட எத்துணைக் கதைகள் உள. இவை என்ன காட்டுகின்றன? உள்ளக்காவலின் அருமையையே காட்டுகின்றன அன்றோ!

மாந்தர் உள்ளத்து ஏற்படும் உணர்ச்சிகள் பலப்பல. நல்லுணர்ச்சிகள் வளர்க்கப்பட வேண்டியவை; வளர வேண்டியவை; போற்றிப் புகழப் பட வேண்டியவை. தீய உணர்ச்சிகள்—ஒழிக்கப் பட வேண்டியவை; அழிக்கப்பட வேண்டியவை பழிக்கப்பட வேண்டியவை. வெள்ளம் தடுத்து நிறுத்துவது அரிதா? அணையைப் பெயர்த்து விடுவது அரிதா? எது நலம் பயக்கும்?

கோபம் போன்ற தீய உணர்வுகளை ஒடுக்கி அடக்குவதே அரிது. கோபம் அடைய எவராலும் முடியும். குழந்தையாலும் முடிகின்றது; விலங்காலும் முடிகின்றது கோபப்பட! ஆனால் அக் கோபத்தை அடக்க எத்துணை நூலறிவு, நுண்ணறிவு, பண்பாடு வேண்டியுளது?