160
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
யாவரும் வருக" என்று தேடித் தேடி உணவு தந்து வந்த, அறவோன் ஆபுத்திரன் தொண்டு எத்தகைய உயர் நலங் கனிந்தது. வற்றா வளமிக்க தன் ‘அமுத சுரபி' வறிதே பயன்படாமல் இருக்க, சாவக நாட்டினர் உணவின்றி உயிர்விடுகின்றனரே என்னும் ஏக்கத்தால் அல்லவோ உயிர் துறந்தான் உண்ணா நோன்பு கொண்டு! தன் உயிரினும் உயர்வாகக் கொண்டது அன்றோ பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு இப்பண்பினை வலியுறுத்துவதே நூல்! நூலின் முடிந்த முடிவும் இதுவே! இதனை வருணனையால் காட்டுகின்றார் ஒரு புலவர்.
'இயற்கைப் பொருள்களாம் கருமுகில் திரண்டு மழை பொழிகின்றது. அம் மழையால் கற்றவர் இதயமாம் நிலத்தில் கிடக்கும் கருத்து என்னும் வித்து முளைத்து வளர்ந்து, கவி என்னும் கவின் கதிர் ஈனுகின்றது. கவிக் கதிர் புலவர் அவை யென்னும் பொலிவு மிகு களம் அடைந்து பதரும் தூசியும் அகன்ற நன்மணியாகிக் களஞ்சியம் சேர்கின்றது. இக் களஞ்சியமாக இருப்பது யாது? நூலே! எத்தகைய அரிய வருணனை! உழைப்பின் பயன் ஒருங்கு தொகுக்கப்பட்டுள்ள இடம் நூல்! மாந்தர் விரும்பும் பொழுதெல்லாம் எடுத்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ள அமைந்தது நூல். பகுத்துண்ணும் பான்மையைத் தன்னகத்துக்கொண்டு வலியுறுத்துவது நூல்! இதனை நுண்ணியதாய் எண்ணி வருணித்த புலவர் பரிதிமால் கலைஞர் ஆவார்!
பகுத்துண்டு வாழ்வதே நூன்முடிவு என்று கூறிய வள்ளுவரிடம் மீண்டும் கேட்டால், “தமக்கென்று அமைந்த உரிமையான வீடு ஒன்று இருக்க வேண்டும்; நல்ல வாழ்க்கைத் துணை நலம் வாய்க்கப் பெறுதல் வேண்டும்; தம் உழைப்பால் குறைவின்றிப் பொருள் பெருக்குதல் வேண்டும்; அதனை உரிய காலத்துத் தொகுத்து வைத்துப் பகுத்துண்டல் வேண்டும்" என்று சொல்லுகிறார்!
வாக்கு!
'தம்மில் இருந்து தமது பாத்துண்ணல்' என்பது அவர்
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
என்பது அவர் நூன் முடிவுரை!