திருக்குறள் கட்டுரைகள்
5
அடிகாள் வருக! அமர்க!
முசில்
ஒரு கதை சொல்வது உண்டு: ஒரு கிளிக்கு இரு குஞ்சுகள் இருந்தன; ஒன்று ஒரு துறவியார் மடத்திலே வாழ்ந்து வந்தது; மற்றொன்று புலால் விற்கும் கடை யொன்றில் வளர்ந்து வந்தது. துறவியின் வளர்ப்புக் கிளி எவர் வந்தாலும் “அடிகாள் வருக! அமர்க! நீர் பருகுக! களைப்பு ஆறுக" என்னும் மொழிகளைக் கூறி இன்புறுத்திற்று. புலவுக் கடைக் கிளியோ எப்பொழுதும் "வெட்டு; குத்து; ஆட்டுக்கறி ஆறணா; கோழிக்கறி நாலணா' என்று கத்திக் கொண்டு இருந்தது. காரணம் என்ன? ஒரே தாயின் இரட்டைக் குஞ்சுகள்; இயல்பில் ஏன் இவ்வேற்றுமை?
சேர்ந்த இனத்தைப் பொறுத்தது பண்பாடு என்பது தெளிவாக வில்லையா? அதனால்தான் சான்றோர்கள் “நல்லாரைக் காண்பது நன்று; நல்லார் சொல் கேட்பது நன்று; நல்லார் குணங்கள் உரைப்பது நன்று; நல்லாரோடு இ ணங்கி இருப்பது நன்று" என்றனர். அன்றியும், “தீயாரைக் காண்பது தீது; தீயார் சொல் கேட்பது தீது; தீயார் குணங்கள் உரைப்பது தீது; தீயாரோடு இணங்கி இருப்பது தீது” என்றனர்! ஏன்?