திருக்குறள் கட்டுரைகள்
9
"மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை” என்பது மெய்ம் மொழி. என்ன இல்லை? நீர் இல்லை; நீரின் விளைவால் உண்டாகும் உணவு இல்லை; விளைவு தரும் புல்லும் பூண்டும், செடியும், கொடியும், பயிரும் பயன் மரமும் சோலையும் காடும் இல்லை. இதனை உண்டும் தின்றும் உயிர் வாழும் புழுவும் பூச்சியும், பறவையும் விலங்கும் மாந்தரும் பிறவும் இல்லை! என்ன இருக்கும்?
கொடிய பாறையும், பொடிந்த பூழ்தியும், வறண்ட பாலையும், வாய்த்த வெடிப்பும், கரிந்த காடும் எரிந்த எலும்பும் காணப் பெறும்! "மழையில்லாவிடின் என்ன இல்லை?' என்பதற்குப் பதிலாக "என்ன உண்டு?" என்று கேட்டால் போதும்! விடை சரியாகி விடும்.
உலக வாழ்வுக்குக் காரணமாக இருப்பவற்றுள் எல்லாம் காரணமாக இருப்பது மழையே. ஆதலின் மழையே அமிழ்து! கடவுளின் அருட் பெருக்கு! உயிர்களின் வித்து! ஒழுக்கத்தின் வடிவு! ஆதலின் கடவுளை வாழ்த்தும் மாந்தன் கடவுள் அருளை வெளிப் படையாகக் காட்டி நிற்கும் வானின் சிறப்பை உணர்தல் வேண்டும். ஆதலின் கடவுள் வாழ்த்தின் பின் வான்சிறப்புக் கூறினார் வள்ளுவர். அவர், மழையின் தனிப்பெருஞ் சிறப்பினை, “விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது”
66
என்று கூறியுள்ளார். வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அன்றி மண்ணில் பசிய நிறப் புல் முளைத் தலையும் காண முடியாது, என்பது இக்குறளின் பொருள்.
புல்லே முளைக்காது என்றால் பிறவற்றைக் காண முடியுமா?
புல்லுக்கு விதை போடுவதோ, நீர் விடுவதோ களை யெடுப்பதோ, காவல் புரிவதோ, உரமிடுவதோ உழவன் செய்வது இல்லை. என்றாலும் தானே முளைத்துக் கிளைத்து வளமுற வாழும் வாய்ப்புப் பெற்றுள்ளது புல்; மழைமட்டும் வேண்டும் அவ்வளவே!
புல்லுக்கு உற்றறியும் ஓர் அறிவுதான் உண்டு. அதாவது, வெட்டிப் போட்டால் வாடும்; நீர் விட்டால் வளரும்! இவ்வளவே அதன் உற்றறிவு! உற்றறிவுடைய ஓரறிவுடைய புல்லே தலை காட்டாத போது, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐயறிவு, உடைய
-