உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. கல்லார் மிக நல்லர்

“படித்தவனாக நடந்து கொள்ள வேண்டாமா? என்று இடித்துரைப்போரை இன்று எங்கும் காண்கிறோம்.

"படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் என்ன தான் வேற்றுமை; பண்பினைத் தராத கல்வியும் ஒரு கல்வியா?” என்று வெறுத்துரைப்போரைப் பார்க்கிறோம்.

"படித்தால் போதுமா? உலகநிலை தெரிய வேண்டாம்? புத்தகப் பூச்சியாக்குவதுதான் பள்ளியின் பணி என்றால் அது நாட்டைப் பிடித்த கேடுதான்" என்று திருத்தம் வேண்டுவோர் மொழியைப் பன்முறை கேட்கிறோம்.

இவற்றில் இருந்து புலனாவது என்ன?

கற்றவர்களிடமிருந்து உலகம் பலவற்றை எதிர் நோக்கு கின்றது. அவ்வெதிர் நோக்கத்திற்கு ஏற்பக் கற்றோர்கள் ல்லாதபோது பட்டபாடு எல்லாம் வீண்தானா என்று ஏங்குகிறது. அவ்வேக்கம் தான் சொல் உருக்கொண்டு அடி போடுகின்றது.

நிலத்தைத் தரிசாக போட்டிருக்கிறான் ஒருவன். மற்றொருவன் பருவம் அறிந்து உழுது பட்டம் அறிந்து விதைத்து, முறையறிந்து பேணி, வருகின்றான். வந்தும், கண்ட பயன் ஏதும் இல்லை என்றால் இவனுக்கும் தரிசு போட்டவனுக்கும் என்ன வேற்றுமை? இவன் முயன்றான். அவன் முயலவில்லை; இவனுக்குப் பயனில்லை. அவனுக்கும் பயன் இல்லை! 'பயனெதிர் நோக்காப் பணி!" என்பது கல்விக்கும், உழவுக்குமா?

உழைத்தும் கண்டு முதல் இல்லாதவன் "தரிசாகப் போட்டிருந்தால் கூட நன்றாக இருந்திருக்குமே” என்று அப்பொழுது எண்ணமாட்டானா? “ஏரும் கலப்பையும் சார்த்தி விடு; மாடு வண்டியை விற்றுவிடு" என்று எவனேனும் சொல்ல

மாட்டானா?